Chandrayaan-3 Controversy: சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு 'சிவசக்தி' என பெயர் சூட்டியது சரியா? மனம் திறந்த இஸ்ரோ தலைவர் சோமநாத்
சந்திரயான் - 3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கிய பகுதிக்கு சிவசக்தி என பிரதமர் மோடி நேற்று பெயர் சூட்டினார்.
நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், கடந்த மாதம் 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு, இந்த மாதம் 23ஆம் தேதி மாலை சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய நான்காவது நாடு மற்றும் நிலவின் தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
சந்திரயான் - 3 தரையிறங்கிய பகுதிக்கு பெயர் வைத்த பிரதமர்:
இச்சூழலில், சந்திரயான் - 3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கிய பகுதிக்கு சிவசக்தி என பிரதமர் மோடி நேற்று பெயர் சூட்டினார். அதேபோல, சந்திரயான் - 2 விண்கலம் தரையிறங்கிய பகுதிக்கு 'திரங்கா' என பெயர் சூட்டப்பட்டது. நிலவில் உள்ள பகுதிக்கு இந்திய பிரதமர் பெயர் சூட்டியது பேசுபொருளாக மாறியது.
நிலவின் மேற்பகுதிக்கு இப்படி யார் வேண்டுமானாலும் பெயர் வைக்கலாமா, நிலவை யார் வேண்டுமானாலும் உரிமை கோரலாமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இது பெரும் சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில், இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோமநாத் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார்.
கேரள மாநிலம் வெங்கனூரில் உள்ள ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி தேவி கோயிலில் நடத்தப்பட்ட சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர், "விண்கலம் தரையிறங்கும் இடத்திற்கு பெயரிட இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு. தரையிறங்கும் இடத்திற்கு இப்படி பெயர் சூட்டுவது முதல் முறை அல்ல.
'சிவசக்தி' என பெயர் சூட்டியது சரியா?
நிலவின் பல பகுதிகளுக்கு இந்திய பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. சந்திரனில் உள்ள பள்ளம் ஒன்றுக்கு சாராபாய் என பெயர் உள்ளது. மற்ற நாடுகளும் தங்கள் அறிவியல் சாதனைகள் தொடர்பாக இடங்களுக்கு பெயர் வைக்கின்றன. சிறிய சோதனைகளை செய்ததற்கு எல்லாம் பெயர் வைக்கரப்படுகிறது. அது ஒரு மரபு" என்றார்.
ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் சந்திரயான் 3 குறித்து பேசிய அவர், "இதுவரை சந்திரயான் -3 திட்டத்தில் இருந்து பல சுவாரஸ்யமான தரவுகளை இஸ்ரோ பெற்றுள்ளது. அவை வரும் நாட்களில் விளக்கப்படும். ரோவர் திட்டமிட்டபடி நகர்கிறது. ரோவரில் இருந்து மிகவும் சுவாரஸ்யமான தரவுகளைப் பெற்று வருகிறோம். உலகில் முதல் முறையாக பெறப்பட்ட தரவு இது. இதை, விஞ்ஞானிகள் வரும் நாட்களில் விளக்குவார்கள்" என்றார்.
கடந்த 1967ஆம் ஆண்டு போடப்பட்ட வெளிப்புற விண்வெளி ஒப்பந்தத்தில் நிலவை குறிப்பிட்ட நாடுகள் உரிமை கொண்டாட முடியாது. நிலவில் எந்த நாடுகள் தரையிறங்கி கொடியை நட்டு முத்திரையை பதித்தாலும் நிலவை யாரும் தனிப்பட்ட முறையில் உரிமை கொண்டாட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.