IRCTC: ஆதார் இருந்தால் மட்டுமே டிக்கெட் முன்பதிவு.. ரயில்வே துறையில் புதிய மாற்றம்!
IRCTC New Rules: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் தங்களது ஐஆர்சிடிசி அக்கவுண்டில் ஆதார் எண்ணை இணைப்பு செய்திருக்க வேண்டியது அவசியம் என சில மாதங்களுக்கு முன் சொல்லப்பட்டது.

ஐஆர்சிடிசி வலைத்தளத்தில் மீண்டும் டிக்கெட் முன்பதிவு முறையில் மாற்றம் செய்யப்பட்டு அதிரடி நடவடிக்கையை இந்திய ரயில்வே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரயில் போக்குவரத்து
இந்தியாவின் மிக முக்கியமான போக்குவரத்து சாதனமாக ரயில்கள் திகழ்கிறது. நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை அனைத்தையும் இணைத்து மக்களை போக்குவரத்து மூலம் ஒன்றிணைக்கும் பணியை ரயில்கள் மேற்கொண்டு வருகிறது. பாசஞ்சர் ரயில்கள், எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட், ராஜ்தானி, டபுள் டக்கர், வந்தே பாரத், தேஜஸ் என பல வகைகளில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இருக்கை, சாதாரண படுக்கை, 3ஆம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, முதல் வகுப்பு ஏசி பெட்டிகள், சேர் கார் இருக்கைகள் என பல வகைகளில் டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொன்றிற்கும் பயண தூரத்தைப் பொறுத்து கட்டணங்கள் மாற்றமும் அமலில் உள்ளது. இப்படிப்பட்ட ரயில்வே நிர்வாகம் பயணிகளின் பாதுகாப்பை கருத்தி கொண்டு பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
டிக்கெட் முன்பதிவில் மாற்றம்
இதனிடையே ரயில்வே துறை ஐஆர்சிடிசி மற்றும் ரயில் ஒன் செயலி மூலமாக டிக்கெட் முன்பதிவை நடத்தி வருகிறது. இதில் இடைத்தரகர்கள், முகவர்கள் என பலரும் தலையிடுவதால் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பலவிதமான சிரமங்களை சந்திப்பதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. குறிப்பாக பல நேரங்களில் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கும் அளவுக்கு சென்று விடுகிறது.
இந்த நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் தங்களது ஐஆர்சிடிசி அக்கவுண்டில் ஆதார் எண்ணை இணைப்பு செய்திருக்க வேண்டியது அவசியம் என சில மாதங்களுக்கு முன் சொல்லப்பட்டது. தொடர்ந்து டிக்கெட் முன்பதிவு முதல் 10 நிமிடங்கள் ஆதார் இணைத்திருக்கும் பயனாளர்களால் மட்டுமே பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டது. முகவர்கள் அதன்பிறகே டிக்கெட் பதிவு செய்ய முடியும் என கூறப்பட்டது.
இப்படியான நிலையில் தற்போது மீண்டும் டிக்கெட் முன்பதிவு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்குகிறது என்றால் முதல் 2 மணி நேரங்கள் அதாவது காலை 10 மணி வரை ஆதார் எண் இணைத்தவர்கள் மட்டுமே டிக்கெட்டுகளை இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்ய முடியும்.
முகவர்கள் முதல் 30 நிமிடங்களுக்குப் பின் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். மேலும் கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் எந்த மாற்றமும் செய்யப்படுவதில்லை. அக்டோபர் 28ம் தேதி முதல் இந்த மாற்றம் அமலுக்கு வந்துள்ளதாக ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.





















