1.55 லட்சம் பேருக்குத்தான் வாய்ப்பு! மாணவர்களுக்கு ஷாக் கொடுக்கப்போகும் ஐ.டி. துறை - ஆய்வில் அதிர்ச்சி
கடந்த நிதியாண்டை விட இந்த நிதியாண்டில் எண்ணிக்கையில் குறைவான புதியவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி முடித்து வரும் 1.55 லட்சம் புதியவர்களுக்கு வரும் நிதியாண்டில் ஐடி மற்றும் தொழில்நுட்பத்துறையில் வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளதாக டீம்லீஸ் ஆட்சேர்ப்பு நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2023 நிதியாண்டில், ஐடி/தொழில்நுட்பத்துறையில் 2.3 புதியவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. கடந்த நிதியாண்டை விட இந்த நிதியாண்டில் எண்ணிக்கையில் குறைவான புதியவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐடி சந்தையில் நிலவும் மந்தமான நிலை:
ஐடி சந்தையில் மந்தமான நிலை நிலவி வருவதும் ஆட்சேர்ப்பு தேர்வுகள் கடுமையாக்கப்பட்டதும் பொறியாளர் மாணவர்களுக்கு சவாலான சூழலை உருவாக்கியுள்ளது. கிட்டத்தட்ட 15 லட்சம் பொறியியல் மாணவர்கள் வேலை தேடி வருவதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வேலை தேடி விண்ணப்பிப்பவர்களில் 45 சதவிகிதத்தினர் மட்டுமே பணிக்கு தேவையான திறன்களை கொண்டுள்ளதாக ஆய்வு கூறுகிறது.
புதியவர்களை வேலைக்கு எடுப்பதை முன்னணி ஐடி நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஆனால், அதே சமயத்தில், மாற்றுத்துறைகளில் வேலைவாய்ப்பு பெருகி வருகிறது. வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீடு, தகவல் தொடர்பு, ஊடகம் மற்றும் தொழில்நுட்பம், சில்லறை மற்றும் நுகர்வோர் வணிகம், வாழ்க்கை அறிவியல் மற்றும் சுகாதாரம், பொறியியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட துறைகள், புதியவர்களை எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது.
தகவல் தொடர்பு, சிக்கலைத் தீர்ப்பது, குழுவாக செயல்படுவது, பரபரப்பான சூழலில் புத்திசாலித்தனமாக செயல்படுவது, மென்பொருள் மேம்பாடு, கிளவுட் கம்ப்யூட்டிங், தரவு பகுப்பாய்வு ஆகிய திறன்களை மாணவர்களிடம் இருந்து நிறுவனங்கள் எதிர்பார்ப்பதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு ஆய்வறிக்கை தந்த அதிர்ச்சி:
கூடுதலாக டிஜிட்டல் திறன், டிஜிட்டல் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் திறமை போன்ற தொழில் திறன்களை மேம்படுத்துவதில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்த ஆய்வறிக்கை குறித்து பேசிய டீம்லீஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் வணிகத்துறை தலைவர் கிருஷ்ணா விஜ், "தொழில்நுட்ப உலகம் வேகமாக வளர்ந்து வருகிறது. நாம் தொடர்ந்து முன்னேற வேண்டும். நிறுவனங்கள் தங்கள் பணியமர்த்தல் எல்லைகளை விரிவுபடுத்துவது மட்டுமல்ல, நம் நாட்டு மாணவர்களின் திறமை வளத்தை அதற்குத் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதை ஆய்வுறிக்கை எடுத்துரைக்கிறது.
தொழில்துறை, கல்வித்துறை மற்றும் அரசாங்கத்தின் கூட்டு முயற்சிகள் மூலம் ஒரு திறன் வளத்தை உருவாக்க முடியும். தொடர்புடைய திட்டங்கள் மற்றும் பாடத்திட்டங்களை வடிவமைக்க வேண்டும். தொழில்துறை சார்ந்த சவால்களைச் சமாளிக்கும் நோக்கில் திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களை ஆதரிப்பதில் அரசின் முன்முயற்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது ஒரே ஒரு முயற்சி அல்ல. மாறாக திறமைகளை வளர்ப்பதற்கும், தொழில்துறையின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குமான கூட்டு இயக்கம்" என்றார்.