நடுவானில் உயிருக்கு போராடிய பயணி...இந்திய விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு..!
ஏறக்குறைய ஐந்து மணிநேரம் கராச்சி விமான நிலையத்தில் A320-271N விமானம் நிறுத்தப்பட்டிருந்தது. அனைத்து சம்பிரதாயங்களும் முடிக்கப்பட்டு விமானம் டெல்லி திரும்பியது.
டெல்லியில் இருந்து தோஹா சென்ற இண்டிகோ விமானம், மருத்துவ அவசரம் ஏற்பட்டதை தொடர்ந்து, பாகிஸ்தானின் கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு நோய்வாய் ஏற்பட்டதையடுத்து, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
தரையிறங்கிய பின்னர், விமான நிலைய மருத்துவக் குழுவால், அந்த பயணி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
நடுவானில் உயிருக்கு போராடிய பயணி:
ஆனால், ஏற்கனவே, அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இறந்த பயணி, 60 வயதான நைஜீரிய நாட்டவரான அப்துல்லா என்பது பின்னர் தெரிய வந்தது. விமானம் கராச்சியில் இருந்து புறப்பட அனுமதிக்கப்பட்டு, இறந்த பயணியின் உடலுடன் டெல்லிக்கு திரும்பியது.
இதுகுறித்து கராச்சி விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், "ஏறக்குறைய ஐந்து மணிநேரம் கராச்சி விமான நிலையத்தில் A320-271N விமானம் நிறுத்தப்பட்டிருந்தது. கராச்சியில் உள்ள அதிகாரிகள் பயணிக்கு இறப்புச் சான்றிதழை வழங்கியதும், அனைத்து சம்பிரதாயங்களும் முடிக்கப்பட்டு விமானம் டெல்லி திரும்பியது"
இண்டிகோ விமான நிறுவனம் இரங்கல்:
இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தச் செய்தியால் நாங்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளோம். இறந்த பயணியின் குடும்பத்தாருக்கும் அன்பானவர்களுக்காகவும் பிரார்த்திக்கிறோம்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, விமானத்தின் மற்ற பயணிகளை மாற்றுவதற்கான ஏற்பாடுகளை தற்போது செய்து வருகிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா தலைநகர் டெல்லியில் இருந்து கத்தார் தலைநகர் தோஹாவுக்கு சென்ற விமானம், பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏனெனில், இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், இந்தியாவில் இருந்து கிளம்பிய விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பினும், அவசர நோக்கங்களுக்காக விமானம் திட்டமிடப்படாத பகுதியில் தரையிறக்கப்படுவது வழக்கமான நிகழ்வுதான்.
முந்தைய சம்பவம்:
சமீபத்தில், இதேபோல, டெல்லியில் இருந்து மும்பை வழியாக 138 பயணிகளுடன் துபாய் சென்ற போயிங் 737 விமானம் பாதியிலேயே தரையிறக்கப்பட்டது. விமானம் மும்பையில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் இடது புற இறக்கையில் , எரிபொருள் குறைவாக இருப்பதாக விமானிக்கு இண்டிகேஷன் வந்திருக்கிறது.
இதனால் சுதாரித்த விமானி, பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் அந்த விமானத்தை பத்திரமாக தரையிறக்கியிருக்கிறார்.
தரையிறங்கிய பின் விமானத்தை சோதனை செய்தபோது, எரிபொருள் டேங்கில் எந்தவெளிப்புற கசிவும் இல்லை என தெரிந்தது. அது இண்டிகேஷன் லைட்டில் ஏற்பட்ட கோளாறு என கண்டறியப்பட்டது. ஆனாலும் உடனடியாக சரி செய்ய முடியாது என பொறியாளர்கள் கூறியதால் , அதன் பின்னர் ஸ்பைஸ்ஜெட், மும்பையில் இருந்து SG 9911 என்ற மாற்று விமானத்தை அனுப்பி, பயணிகளை துபாய்க்கு அழைத்துச் சென்றது.