விமானத்தில் ஏற்ற மறுத்த இண்டிகோ ஏர்லைன்ஸ்.. மாற்றுத் திறனாளி சிறுவனுக்குக் குவிந்த ஆதரவு!
ராஞ்சி விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளி சிறுவன் விமானத்தில் ஏறுவதற்கு மறுப்பு தெரிவித்த இண்டிகோ ஏர்லைன்ஸ், எதிர்ப்புகள் எழுந்த பிறகு சிறுவனுக்கு எலக்ட்ரிக் வீல்சேர் வாங்கித் தர முன் வந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளியான சிறுவனும், அவரது குடும்பமும் விமானத்தில் ஏறுவதற்கு மறுப்பு தெரிவித்த இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த விவகாரம் மீதான எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து கடுமையான சூழலில் தங்களால் இயன்ற சிறந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறியுள்ளது.
விமானத்தில் ஏறுவதற்கு முன்பு, மாற்றுத்திறனாளி சிறுவன் கடும் அச்சத்தில் இருந்தததாகக் கூறியுள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் தலைமை நிர்வான அதிகாரி ரோனொஜாய் தத்தா, இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், `வாடிக்கையாளர்களுக்குக் கண்ணியமும், இரக்கமும் காட்டப்படும் சேவையை வழங்குவதே எங்களுக்கு முதன்மைப் பணி என்ற போதும், விமான நிலைய அதிகாரிகள் பாதுகாப்பு வழிமுறைகளைக் கணக்கில் கொண்டு, இந்தக் கடுமையான முடிவை எடுப்பதற்காகத் தள்ளப்பட்டனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
`விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் சிறுவனையும், அவரது குடும்பத்தினரையும் விமானத்தில் ஏற்றும் நோக்கத்தோடு மட்டுமே அதிகாரிகள் நடந்துகொண்டார்கள்’ எனக் கூறியுள்ள இண்டிகோ நிறுவனம் இந்த விவகாரம் காரணமாக எழுந்துள்ள சர்ச்சைகளால் பாதிக்கப்பட்டிருப்பதால், மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு எலக்ட்ரிக் வீல்சேர் வாங்கித் தர முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளது.
A shocking, unlawful incident of discrimination by @IndiGo6E at Ranchi airport. #MustRead #MustDemandJustice
— Natasha Badhwar (@natashabadhwar) May 8, 2022
Reported by Manisha Gupta, witnessed by hundreds of co-passengers. #DisabilityRights#DisabilityTwitter https://t.co/wvFLfQbng5 pic.twitter.com/C4rCcMssn8
கடந்த மே 8 அன்று, மனிஷா குப்தா என்பவரின் பேஸ்புக் பதிவில் தான் செல்ல வேண்டிய விமானத்தில் மாற்றுத் திறனாளி சிறுவனும், அவரது குடும்பமும் பயணிக்க அனுமதிக்கப்படாதது குறித்து கூறியிருந்தது வைரலாகியது. இதனைத் தொடர்ந்து மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து, `இந்த விவகாரத்தில் எந்த சகிப்பும் காட்டப்படாது. எந்த ஒரு மனிதரும் இப்படியொரு கஷ்டத்தை அனுபவிக்ககூடாது. இந்த விவகாரத்தில் நானே நேரடியாக தலையிட்டு விசாரணை மேற்கொள்ளவிருக்கிறேன். நிச்சயம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
There is zero tolerance towards such behaviour. No human being should have to go through this! Investigating the matter by myself, post which appropriate action will be taken. https://t.co/GJkeQcQ9iW
— Jyotiraditya M. Scindia (@JM_Scindia) May 9, 2022
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு எலக்ட்ரிக் வீல்சேர் வாங்கித் தருவதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.