கத்தாரில் தண்டனை பெற்று வரும் முன்னாள் கடற்படை வீரர்கள் மீட்கப்படுவார்களா? களத்தில் இந்திய தூதர்கள்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படை வீரர்களுக்கு தூதரக உதவிகள் அளிக்கப்பட்டுள்ளது. கத்தாருக்கான இந்திய தூதரும் தூதரக அதிகாரிகளும் அவர்களை சந்தித்து பேசியுள்ளனர்.
முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் 8 பேருக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கத்தார் நீதிமன்ற தீர்ப்பின் பின்னணி:
முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளான கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் சவுரப் வசிஷ்ட், கமாண்டர் புரேனேந்து திவாரி, கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கமாண்டர் சுகுணகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கமாண்டர் அமித் நாக்பால், மாலுமி ராகேஷ் ஆகிய 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்திய பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த இவர்கள், தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸில் சேர்ந்துள்ளனர். இந்த தனியார் நிறுவனம்தான், கத்தார் பாதுகாப்பு படைகளுக்கு பயிற்சி வழங்கி வந்துள்ளது.
தனியார் நிறுவனத்துக்காக பணியாற்ற வந்த இவர்களை, கடந்த 2022ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி, கத்தார் உளவுத்துறை கைது செய்தது. அப்போது இருந்து இப்போது வரை இவர்கள் தனிமை சிறையில் வாடி வருகின்றனர். ஆனால், இவர்கள் மீது என்ன குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
களத்தில் இறங்கிய இந்திய தூதர்கள்:
இதை தொடர்ந்து, மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியில் அவர்களின் மரண தண்டனை குறைக்கப்பட்டது. இது, இந்திய அரசுக்கு ராஜதந்திர ரீதியாக பெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படை வீரர்களுக்கு தூதரக உதவிகள் அளிக்கப்பட்டுள்ளது. கத்தாருக்கான இந்திய தூதரும் தூதரக அதிகாரிகளும் அவர்களை சந்தித்து பேசியுள்ளனர்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இதுபற்றி விவரிக்கையில், "தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய நமது சட்ட நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். அதை 60 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
கடந்த டிசம்பர் 28ஆம் தேதி, மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இனி, கத்தார் உச்ச நீதிமன்றத்துக்குப் போவது தொடர்பாக வழக்கறிஞர் குழுவால் முடிவு செய்யப்படும். இன்னும் எங்களுக்கு அவகாசம் இருக்கிறது. நமது தூதர்கள், அங்கு சென்று, அவர்களை சந்தித்து நலம் விசாரித்தனர்" என்றார்.
#WATCH | On Qatar court commuting death sentence to 8 Indian ex-Navy personnel, MEA Spokesperson Randhir Jaiswal says, "Our ambassador, along with our embassy officials, met the eight detained. As we had conveyed to you last time, the legal team is looking into the appeal aspect.… pic.twitter.com/nFOHK1XZ6t
— ANI (@ANI) January 18, 2024
கத்தார் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டவர்கள், ஒரு காலத்தில், இந்திய கடற்படையின் முக்கிய அதிகாரிகளாக பணியாற்றினர். இவர்களின் வழிகாட்டுதலில், முக்கியமான இந்திய போர் கப்பல்கள் இயங்கப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளை விடுவிக்க கோரி அவர்களின் குடும்பத்தினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.