கிட்டத்தட்ட 1 கோடி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.. ஒரே ஆண்டில் இந்தியாவுக்கு இத்தனை பேர் விசிட்டா?
இந்தாண்டுக்கான பயணம் மற்றும் உலக சுற்றுலா குறியீட்டில் 119 நாடுகளில் இந்தியா 39ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவின் வளமான பாரம்பரியம், கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் பிரமிக்கத்தக்க இடங்கள், வாய்ப்புகளுக்கான செல்வத்தை வழங்குவதால், நாட்டின் சுற்றுலாத் துறை உலகளாவிய விருப்பமாக உருவாகி வருகிறது.
பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியான, சுற்றுலாத் துறை, வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, பல்வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துகிறது.
இந்திய சுற்றுலா:
உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள சமீபத்திய TTDI (பயணம் மற்றும் உலக சுற்றுலா குறியீடு) 2024 அறிக்கையில், 119 நாடுகளில் இந்தியா 39-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவை ஒரு விரும்பத்தக்க சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு உறுதியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் 2047-ம் ஆண்டில் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு சுற்றுலாத் துறை ஒரு முக்கிய உந்துகோலாக மாறி வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டில், இந்தியா 9.24 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை (FTAs) பதிவு செய்துள்ளது.
தேக்கோ அப்னா தேஷ் (இந்தியாவை காணுங்கள்) பிரஷாத், துடிப்பான கிராமத் திட்டம், ஸ்வதேஷ் 2.0 மற்றும் (பிராந்திய இணைப்புத் திட்டம்), உதான் உட்பட உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்த இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது.
கோடிக்கணக்கில் செலவழிக்கும் இந்தியா:
தொடர்ச்சியான முயற்சிகள் காரணமாக, உள்நாட்டு சுற்றுலாவில் இந்தியா நேர்மறையான பாதையைக் காட்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்த சுமார் 1 பில்லியன் டாலர் (ரூ.7,000 கோடி) மதிப்புள்ள விரிவான சுற்றுலா உள்கட்டமைப்பை இந்தியா உருவாக்கியுள்ளது.
இந்தியாவின் ஆன்மாவான கிராமங்களில் சுற்றுலாவை மேம்படுத்த, சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டி 2023-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. சமூக அடிப்படையிலான விழுமியங்கள், அனைத்து அம்சங்களிலும் நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்பு, கலாச்சாரம், இயற்கை வளங்களைப் பாதுகாத்து ஊக்குவிக்கும் கிராமங்களை அடையாளம் கண்டு அங்கீகரிப்பதே இதன் நோக்கமாகும்.
அந்த வகையில், இந்தாண்டுக்கான சிறந்த சுற்றுலா தளங்களின் பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து கீழடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் இருந்து துத்மராஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில் சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டியின் முதல் பதிப்பில் 795 கிராமங்களிலிருந்து விண்ணப்பங்கள் வந்தன. சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டியின் இரண்டாவது ஆண்டில், 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலிருந்து மொத்தம் 991 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 8 பிரிவுகளின் 36 கிராமங்கள் சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டியில் வெற்றியாளர்களாக அங்கீகரிக்கப்பட்டன.