INDIA Rally: நெருங்கும் தேர்தல்.. கெஜ்ரிவாலுக்காக I.N.D.I.A கூட்டணி எடுத்த அதிரடி முடிவு.. அலறும் பாஜக!
INDIA Rally: கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மாபெரும் பேரணி நடத்தப்படும் என I.N.D.I.A கூட்டணி அறிவித்துள்ளது.
INDIA Rally: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி, மக்களவை தேர்தல் தொடங்குகிறது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதவான வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 25 நாள்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இம்மாதிரியான பரபரப்பான சூழலில், சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவரை நிகழ்ந்திராத வகையில், சிட்டிங் முதலமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிரட்டப்படுகிறார்களா எதிர்க்கட்சி தலைவர்கள்?
அமலாக்கத்துறை அதிகாரிகளால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது தேசிய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோர் ஏற்கனவே சிறையில் உள்ளனர்.
தேர்தல் நெருங்கும் சூழலில் ஆம் ஆத்மி கட்சியின் மூன்று முக்கிய தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைநர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா என நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் கெஜ்ரிவால் கைதை கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில், கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மாபெரும் பேரணி நடத்தப்படும் என I.N.D.I.A கூட்டணி அறிவித்துள்ளது. நாட்டின் நலனையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வரும் 31ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பேரணி நடத்தப்படும் என ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
I.N.D.I.A கூட்டணி எடுத்த அதிரடி முடிவு:
டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இதுதொடர்பான அறிவிப்பை கூட்டாக வெளியிட்டுள்ளன. அப்போது பேசிய டெல்லியின் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய், "இந்தியா கூட்டணியின் உயர்மட்டத் தலைவர்கள் இந்த பேரணியில் பங்கேற்கவுள்ளனர்.
ஜனநாயகமும், நாடும் ஆபத்தில் உள்ளன. நாட்டின் நலன்களையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் வகையில் நடைபெறும் இந்த மாபெரும் பேரணியில் I.N.D.I.A கூட்டணியின் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும்.
இது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் அச்சுறுத்தப்படுகின்றன. ஒன்று அவர்கள் பணத்தைப் பயன்படுத்தி மக்களை வாங்குகிறார்கள் அல்லது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ (மத்திய புலனாய்வு அமைப்புகள்) மூலம் அவர்களைப் பயமுறுத்துகிறார்கள். யாரேனும் தலைவணங்க மறுத்தால், பொய் வழக்குகளில் கைது செய்யப்படுவார்கள்.
INDIA கூட்டணி தலைவர்கள் அனைவரும் பொய் வழக்குகளில் சிக்கியுள்ளனர். டெல்லியே கோட்டையாக மாற்றியுள்ளார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் போராட்டம் நடத்தியபோது கைது செய்யப்பட்டனர்.
கெஜ்ரிவாலின் குடும்பத்தினர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். எங்கள் கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்தனர். நேற்று (சனிக்கிழமை) ஷாஹீதி பூங்காவில், எங்களை குற்றவாளிகள் போல் நடத்தினர்" என்றார்.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது பாஜகவுக்கு பெரும் சவாலை தரும் என அரசியல் வல்லுநரகள் கருதுகின்றனர். இம்மாதிரியான சூழலில், I.N.D.I.A கூட்டணியின் பேரணி பாஜகக்கு மேலும் நெருக்கடியை தந்துள்ளது.