CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ஆசிரியர்களும் மாணவர்களும் பொதுத்தேர்வு குறித்த போலி செய்திகளை நம்ப வேண்டாம் என்று சுற்றறிக்கை மூலம் எச்சரிக்கை செய்துள்ளது.
10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ள சூழலில், சிபிஎஸ்இ போலி செய்திகளை நம்ப வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இதுகுறித்துக் கூறும்போது, ’’2025 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களின் விவரங்களையோ பிராந்திய அளவில் சிறப்பிடம் பெறும் மாணவர்களின் தகவலையோ வெளியிட மாட்டோம்’’ என்று தெரிவித்துள்ளது.
ஆரோக்கியம் இல்லாத போட்டியைத் தவிர்க்கவே...
முன்னதாக கொரோனா காலத்தில் எல்லோருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்ட காலத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டு, அறிமுகம் செய்யப்பட்டது. அது அப்படியே தொடர்ந்து வருகிறது. மாணவர்களிடையே ஆரோக்கியம் இல்லாத போட்டியைத் தவிர்க்கும் இந்த முடிவு நடைமுறையில் உள்ளது. பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 33 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும்.
அதேபோல ஆசிரியர்களும் மாணவர்களும் பொதுத்தேர்வு குறித்த போலி செய்திகளை நம்ப வேண்டாம் என்று சுற்றறிக்கை மூலம் எச்சரிக்கை செய்துள்ளது. பாடத்திட்டம் 15 சதவீதம் குறைக்கப்பட்டதாகவும் புத்தகத்தைப் பார்த்துக்கொண்டே தேர்வை எழுதலாம் என்று கூறப்பட்ட தகவலையும் சிபிஎஸ்இ மறுத்துள்ளது.
அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே...
தன்னுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் தகவல்களை மட்டுமே நம்பவேண்டும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
பொதுத்தேர்வு தேதிகள் எப்போது?
10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதிகள் எப்போது அறிவிக்கப்படும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கிடையே இன்னும் சில தினங்களில் தேர்வு தேதிகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களை அடிப்படியாகக் கொண்டு பார்த்தோமானால், பிப்ரவரி 15ஆம் தேதி தேர்வுகள் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்தது என்ன?
இந்தூரில் நடைபெற்ற, ’இடைவெளியைக் குறைக்கும்’ பள்ளி முதல்வர்களுக்கான மாநாட்டில் சிபிஎஸ்இ போபால் மண்டல அலுவலர் விகாஸ் குமார் அகர்வால் பாடத்திட்ட குறைப்பு குறித்து தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.
இதன்படி அனைத்து பாடங்களிலும் 15 சதவீத அளவுக்குப் பாடத்திட்டம் அளவுக்குக் குறைக்கப்படுவதாகவும் வெறுமனே மனப்பாடம் செய்வதைத் தவிர்த்து முக்கியப் பாடங்களில் அதிக கவனம் செலுத்தி மாணவர்கள் படிப்பதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்பட்டது.
மதிப்பீட்டு முறையிலும் மாற்றம் இல்லை
அதேபோல மதிப்பீட்டு முறையிலும் மாற்றம் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டது. எனினும் இவை அனைத்திலும் உண்மை இல்லை என்று சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்துள்ளது.