நடுவானில் வந்த மாரடைப்பு! 2 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுக்கு வந்த பெண் மரணம் - சோகத்தில் கள்ளக்குறிச்சி
மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் நடுவானிலே கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பெண் பயணி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து உயர்பதவி முதல் வீட்டு வேலை வரை பல பணிகளுக்காக பலரும் மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளுக்கும் வேலைக்காக சென்றுள்ளனர்.
மலேசியாவிற்கு வேலைச் சென்ற பெண்:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது சங்கராபுரம். இங்கு வசித்து வந்தவர் ராசாத்தி. அவருக்கு வயது 37. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூருக்கு வேலைக்காக சென்றுள்ளார். அங்கு அவர் வீட்டு வேலைக்காக சென்றிருந்தார்.
அங்கு ராசாத்தி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் அங்குள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவருக்கு நுரையீரலில் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சொந்த ஊருக்குச் செல்ல ராசாத்தி முடிவு செய்துள்ளார்.
நடுவானிலே மரணம்:
இதையடுத்து, தனது வேலையை விட்டுவிட்டு கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலமாக சென்னை திரும்பியுள்ளார். விமானம் நடுவானில் வந்து கொண்டிருந்தபோது திடீரென ராசாத்திக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விமானக் குழுவினர் அவருக்கு முதலுதவி அளித்தனர்.
மேலும், விமானி உடனடியாக சென்னை விமான நிலையத்திற்கு தகவல் அளித்தார். இதையடுத்து, விமான நிலையத்தில் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். அவர்கள் விமானம் தரையிறங்கியவுடன் ராசாத்தியை பரிசோதித்தனர். ஆனால், துரதிஷ்டவசமாக ராசாத்தி ஏற்கனவே உயிரிழந்திருந்தார். நடுவானிலே அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவ குழு தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தினர், உறவினர்கள் சோகம்:
இதையடுத்து, சென்னை விமான நிலைய போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ராசாத்தியின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
2 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊருக்கு வந்த பெண் விமானத்திலே மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் விமான நிலையத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தால் ராசாத்தியின் குடும்பத்தினரும், உறவினர்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ராசாத்தியின் சொந்த ஊரான சங்கராபுரத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.