சார், மேடம் எல்லாம் வேண்டாம்: டீச்சர் போதும்! கேரளப் பள்ளிகளில் பாலின நடுநிலைமையை நிலைநாட்டும் முயற்சி
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில், மாணவர்கள் இனி ஆசிரியர்களை சார், மேடம் என்றெல்லாம் பாலினம் பொருத்து அழைக்க வேண்டாம் நடுநிலைமையாக டீச்சர் என்றழைத்தால் மட்டும் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில், மாணவர்கள் இனி ஆசிரியர்களை சார், மேடம் என்றெல்லாம் பாலினம் பொருத்து அழைக்க வேண்டாம். நடுநிலைமையாக டீச்சர் என்றழைத்தால் மட்டும் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலசேரி கிராமத்தில் உள்ள சீனியர் பேஸிக் ஸ்கூல் என்ற அரசுப் பள்ளியில் தான் இந்த நடைமுறை முதன்முதலாக அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. பாலின நடுநிலைமையைக் கடைப்பிடிக்க இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தப் பள்ளியில் 8 ஆசிரியர்களும், ஆசிரியைகள் 9 பேரும் உள்ளனர். 300 மாணவர்கள் படிக்கின்றனர்.
அண்மையில் பல்வேறு அரசுப் பள்ளிகளிலும் பாலின சமத்துவ சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண், பெண் என இருபாலினத்தவருக்கும் ஒரே மாதிரியான மேல் சட்டை, பேன்ட் உடுப்பு சீருடையாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஒலசேரி பள்ளியில் பாலின நடுநிலைமையை உருவாக்கும் புதிய பழக்கம் அமலுக்கு வந்துள்ளது.
இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் எச்.வேணுகோபாலன் கூறியதாவது: 3“இந்த யோசனையைச் சொன்னதே ஓர் ஆண் ஆசிரியர் தான். வி.சஞ்சீவி குமார் என்ற அந்த ஆசிரியர் தான் ஆசிரியர்களை சார் என்றும் ஆசிரியைகளை மேடம் என்றும் ஏன் அழைக்க வேண்டும்? ஒட்டுமொத்தமாக அனைவரையும் டீச்சர் என்று அழைக்கச் செய்தால் என்னவென்று கேள்வி எழுப்பினார். பாலக்காட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் போபன் மட்டுமந்தா, அரசு அலுவலகங்களில் சார் என்றழைக்கும் முறையை எதிர்த்து ஒரு போராட்டத்தை முன்னெடுத்தார். அவரால் ஈர்க்கப்பட்டே சஞ்சீவி சார் இந்த நடைமுறையைப் பள்ளியில் கொண்டு வர யோசனை கூறினார்.
இந்த நடைமுறை எங்கள் பள்ளியிலிருந்து சற்றே தொலைவில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்திலும் நடைமுறையில் உள்ளது” இவ்வாறு தலைமை ஆசிரியர் கூறினார்.
மேலும் “மாத்தூர் பஞ்சாயத்து அலுவலகம் பள்ளியிலிருந்து 14 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு கடந்த ஜூலை மாதம் முதல் அலுவலர்களை சார், மேடம் என அழைக்கும் பழக்கம் கைவிடப்பட்டது. மாறாக அந்தந்த அலுவலர்களின் பதவியின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களை அழைக்கும் பழக்கம் கொண்டுவரப்பட்டது.
அதனால், பஞ்சாயத்து முடிவு பள்ளியிலும் பிரதிபலித்தது. அதையே நாங்கள் எங்கள் பள்ளியிலும் அறிமுகப்படுத்தினோம். அதனை பெற்றோரும் வெகுவாக வரவேற்றுள்ளனர்.
டிசம்பர் 1 ஆம் தேதி இதனைப் பள்ளியில் நடைமுறைக்குக் கொண்டு வந்தோம். முதலில் மாணவர்கள் மத்தியில் சற்றே தயக்கம் இருந்தது. பின்னர் மெல்ல மெல்ல அவர்கள் மாற்றிக் கொண்டனர். இப்போது அனைவரையும் டீச்சர் என்றே அழைக்கின்றனர்” என்று தலைமை ஆசிரியர் வேணுகோபால் தெரிவித்தார்.
சமூக ஆர்வலர் போபன் மட்டுமந்தா, அரசு அலுவலகங்களில் சார், மேடம் நடைமுறை ஒழிக்கப்பட்டது போல் பள்ளிகளிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக செய்வதால் மாணாக்கர் மத்தியில் பாலின நீதி குறித்த புரிதல் ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் சார் என்பதே காலனி ஆதிக்கச் சொல், அதைப் புறக்கணிப்பது நல்லது என்றே இன்னும் சிலர் கூறுகின்றனர்.