11 AM Headlines: 2 நாட்களில் குரூப் 4 தேர்வு முடிவுகள்? இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்? டாப் 10 செய்திகள்
11 AM Headlines: உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை 11 மணி தலைப்புச் செய்திகளாக காணலாம்.
2 தினங்களில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு முடிவுகள்
குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்னும் 2 நாட்களில் வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுளது. தேர்வு முடிந்த 3 மாதத்திற்குள் முடிவுகள் வெளியாவது இதுவே முதல்முறையாகும். இந்த தேர்வின் மூலம் 8 ஆயிரத்து 932 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தீபாவளியை ஒட்டி சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக இன்று முதல், அடுத்த 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து பல ஊர்களுக்கு இன்று வழக்கமாக இயங்கும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 700 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அடுத்த 3 நாட்களுக்கு 14,086 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
”திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள்” - விஜய் பேச்சு
திராவிடமும் தமிழ் தேசியமும் தங்களது இரு கண்கள் என, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் அக்கட்சி தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். அரசியல் எதிரி திமுக என்றும், கொள்கை எதிரி பாஜக என்றும் விளக்கமளித்துள்ளார். தங்களது கூட்டணி ஆட்சியில் அதிகாரப்பகிர்வு இருக்கும் எனவு அறிவித்து விஜய் கவனம் ஈர்த்துள்ளார்.
விஜய்க்கு குவியும் ஆதரவும், எதிர்ப்பும்:
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் நிகழ்த்திய உரைக்கு, ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர குவிந்து வருகின்றன. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற தவெக கொள்கைக்கு, விசிக, பாஜக போன்ற கட்சிகள் வரவேற்பு அளித்துள்ளன. அதேநேரம், பழுத்த மரம் தான் கல் அடி படும், அதிமுக தொண்டர்களை விஜய் இழுக்க நினைப்பதால், அக்கட்சியை விமர்சிக்கவில்லை, என திமுகவினர் விஜயின் பேச்சுக்கு பதிலடி தந்து வருகின்றனர்.
அடடே..! குறைந்த தங்கத்தின் விலை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து, 58 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. அதன்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை 45 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 315 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 107 ரூபாயாக தொடர்கிறது.
நகை திருடிய இன்ஸ்டாகிராம் பிரபலம்
சொகுசான வாழ்க்கைக்காக, உறவினர் வீட்டில் 17 சவரன் தங்க நகைகளை திருடிய கேரளாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் முபீனா (26) கைது செய்யப்பட்டுள்ளார். முதலில் திருடியதை மறுத்த நிலையில், சிசிடிவி கேமராவில் அவர் வீட்டில் நுழைந்து திருடிச் செல்லும் காட்சிகள் பதிவானதைக் காட்டி போலீசார் விசாரிக்கையில், திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
பட்டாசு கடையில் வெடிவிபத்து
ஐதராபாத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட பட்டாசுக் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசுகள் வெடித்ததை கண்டதும் உள்ளே இருந்த வாடிக்கையாளர்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். இந்த விபத்தில் 10 வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்த நிலையில், 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சவுதி அரேபியாவில் ஒரு வாரத்தில் 21,000 பேர் கைது
சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக குடியேறிய 21,971 பேர் கடந்த ஒருவாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக் அடைக்கலம் அளித்ததாக 18 பேர் அதிரடியாக கைது. பிடிபட்டவர்களை சொந்த நாடுகளுக்கு திரும்ப அனுப்ப நடவடிக்கை. சட்ட விரோத குடியேறிகளுக்கு அடைக்கலம் அளிப்போருக்கு 15 ஆண் சிறை; வீடு, சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்?
தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக, முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணம் செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடருக்காக, கம்பீர் தலைமியிலான இந்திய அணி தயாராகி வருகிறது. இதன் காரணமாக, நவம்பர் 8 தொடங்கி 15ம் தேதி வரை நடைபெற உள்ள டி20 தொடரில் பங்கேற்கும், இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணிக்கு லட்சுமணம் பயிற்சியாளராக செயல்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொடர் தோல்வியால் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் அண்மையில் விலகி இருந்தார். இதையடுத்து ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான ODI மற்றும் T20 தொடரில், ரிஸ்வான் தலைமையில் பாகிஸ்தான் அணி களமிறங்க உள்ளது.