கருப்பு பூஞ்சைக்கு மாத்திரை கண்டுபிடித்தது ஐஐடி!
கருப்பு பூஞ்சைக்கு மாத்திரை வடிவிலான மருந்தை ஐஐடி-ஹைதராபாத் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலின் பாதிப்ப தினசரி 33 ஆயிரத்திற்கும் அதிகமான அளவில் பதிவாகி வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இதே அளவில்தான் பாதிப்பு பதிவாகி வருகிறது. இந்த சூழலில், நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கருப்பு பூஞ்சையின் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இந்த தொற்றின் பாதிப்பு ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் காணப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் இந்த தொற்றின் தாக்கம் சில மாவட்டங்களில் காணப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 400 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவை அச்சுறுத்தும் கருப்பு பூஞ்சை நோய்க்கு புதிதாக ஒரு மருந்தை ஐஐடி-ஹைதராபாத் கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தை வாய் வழியாக எடுத்து கொள்ளலாம். தற்போது கருப்பு பூஞ்சை நோய்க்கு இந்தியா முழுவதும் காலா அசார் எனப்படும் கருங்காய்ச்சலுக்கு தரப்படும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதாவது காலா அசார் நோய்க்கு தரப்படும் ஆம்போடெரிசின்-பி தான் கருப்பு பூஞ்சை நோய்க்கு தரப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் ஆம்போடெரிசின்-பி யை மாத்திரை வடிவில் தயாராக்கும் முறையை ஐஐடி ஹைதராபாத் கண்டுபிடித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஐஐடி-ஹைதராபாத்தில் மருத்துவர் சந்திரசேகர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு காலா அசார் நோய்க்கு மாத்திரை வடிவில் ஆம்போடெரிசின்-பி தயாரிக்க திட்டமிட்டிருந்தது. இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது. எனினும் மாத்திரை வடிவில் இந்த மருந்தை எடுத்து கொண்டால் அது சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படலாம் என்ற பயம் இருந்து வந்தது. இது தொடர்பாகவும் இந்தக் குழு ஆய்வு நடத்தியது.
அந்த ஆய்வில் மாத்திரை வடிவில் இம்மருந்தை சாப்பிட்டால் சிறுநீரகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்த மருந்தை மாத்திரை வடிவில் எடுத்து கொள்ளலாம் என்று ஆராய்ச்சியின் முடிவில் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தொழில்நுட்பத்தை அதிகமாக மக்களுக்கு பயன்படும் வகையில் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அளிக்க ஐஐடி-ஹைதராபாத் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக இதற்கு ஐபிஆர் உரிமைகளை பெற போவதில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்த தொழில்நுட்பம் மூலம் மாத்திரைகள் தயாரிக்கப்பட்டால் ஒரு மாத்திரையின் விலை 200 ரூபாய் ஆக குறையும். இதனால் தற்போது அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சைக்கு இந்த மாத்திரைகளை நோயாளிகள் எளிதாக வாங்கி உட்கொள்ள முடியும். எனவே தற்போதைய சூழலை கருதி இதை அரசு உடனடியாக விற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று ஐஐடி ஹைதராபாத் தெரிவித்துள்ளது. இந்த மருந்தை அரசு உடனடியாக ஒப்புதல் அளித்து சந்தைக்கு கொண்டு வர வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.