பரபரப்பான மார்க்கெட்டில் திடீரென சாலையில் விழுந்த விரிசல்..! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..! நடந்தது என்ன..?
ஹைதரபாத்தில் உள்ள சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் ஏராளமான கார்களும், இரு சக்கர வாகனங்களும் கவிழ்ந்து விழுந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திடீரென விழுந்த பள்ளம்:
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் கோஷமஹால் பகுதியில் வெள்ளிக்கிழமை அன்று சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால், அங்கு பதற்றம் நிலவியது. இருப்பினும், இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. விபத்துக்குப் பிறகு, காவல்துறை மற்றும் கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து கோஷமஹால் காவல் உதவி ஆணையர் சதீஷ் குமார் கூறுகையில், "உடனடியாக இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தோம். சாலைக்கு அடியில் செல்லும் நீர்நிலையே இதற்கு காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. போலீசார் சம்பவ இடத்தில் உள்ளனர். சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை" என்றார்.
பள்ளத்தில் கவிழ்ந்த கார்கள்:
வெள்ளிக்கிழமை அன்று, மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்தபோதுதான், மார்கெட் பகுதியில் சாலை சரிந்து விழுந்தது. சாலை சரிந்ததால் சாலையில் அமைக்கப்பட்ட காய்கறி கடைகள் தரைமட்டமாகின. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வெள்ளிக்கிழமை என்பதால், அந்த பகுதியில் மார்க்கெட் போடப்பட்டிருந்தது. எனவே, பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. மற்ற நாட்களில், சாலைகளில் வாகனங்கள் அதிகம் இருந்திருக்கும். சாலை சரிந்து விழுந்ததால் கார்கள், இரு சக்கர வாகனங்களும் பள்ளத்திற்குள் விழுந்தன.
இதையடுத்து மேயர் கட்வால் விஜயலட்சுமி சம்பவ இடத்தை பார்வையிட்டார். மேலும், குப்பைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
I'm very much saddened by the incident of road collapse @ Gosha Mahal in #Hyderabad
— Mohd Abdul Sattar (@SattarFarooqui) December 23, 2022
Thank God - No Casualties
Damages caused to vendors & vehicles should be compensated by #Telangana govt.
Mallepally-GoshaMahal road needs TOTAL CARE@GHMCOnline @MinisterKTR @GadwalvijayaTRS pic.twitter.com/rtG2BHHsGb
சாக்கடை நீர் தடையின்றி செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். விரைவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் மேயர் தெரிவித்தார்.
பதற்றம்:
இதனிடையே, சம்பவ இடத்துக்குச் சென்ற அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவர்கள், சம்பவத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவசரகால சூழ்நிலைகளை கையாளுவதற்கு மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் சாலை சரிந்து விழுந்த சம்பவம் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.