Padma Awards: அஜித்திற்கு விருது கிடைத்தது எப்படி?பத்ம விருதாளர்களை தேர்வு செய்வது யார்? தனிநபர் விண்ணப்பிக்கலாமா?
Padma Awards: மத்திய அரசால் வழங்கப்படும் பத்ம விருதுகளுக்கான நபர்கள், எப்படி தேர்வு செய்யப்படுகின்றனர் என்பது போன்ற விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Padma Awards: மத்திய அரசால் வழங்கப்படும் பத்ம விருதுகளுக்கு, எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது போன்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
பத்ம விருதுகள்:
பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளாகும். அவை பத்ம விபூஷன் (விதிவிலக்கான மற்றும் புகழ்பெற்ற சேவைக்காக), பத்ம பூஷன் (உயர் வரிசையின் புகழ்பெற்ற சேவை) மற்றும் பத்மஸ்ரீ (புகழ்பெற்ற சேவை) என மூன்று பிரிவுகளில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. பொது சேவையுடன் தொடர்புடைய அனைத்து செயல்பாடுகள் அல்லது துறைகளில் ஒருவர் நிகழ்த்திய சாதனை அல்லது பங்களிப்புகளை அங்கீகரிக்க இந்த விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிரதமரால் அமைக்கப்படும் பத்ம விருதுகள் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
பத்ம விருதுகள் வரலாறு:
இந்திய அரசாங்கம் 1954 இல் பாரத ரத்னா மற்றும் பத்ம விபூஷன் எனப்படும் இரண்டு சிவிலியன் விருதுகளை நிறுவியது. அதில் பத்ம விபூஷன் ஆனது பஹேலா வர்க், துஸ்ரா வர்க் மற்றும் திஸ்ரா வர்க் என மூன்று வகுப்புகளைக் கொண்டிருந்தது. ஆனால், ஜனவரி 8, 1955 அன்று வெளியிடப்பட்ட குடியரசுத் தலைவர் அறிவிப்பின்படி அந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ என பெயர் மாற்றம் செய்யப்பட்டன. 1954 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பத்ம விருதுகள், 1978, 1979 மற்றும் 1993 முதல் 1997 வரையிலான ஆண்டுகளில் சிறிய குறுக்கீடுகள் தவிர ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுகிறது.
விருதுகளின் விவரம்:
விதிவிலக்கான மற்றும் புகழ்பெற்ற சேவைக்காக பத்ம விபூஷன் விருதும், உயர் வரிசையின் சிறப்பான சேவைக்காக பத்ம பூஷன் விருதும் மற்றும் சிறந்த சேவைக்காக பத்மஸ்ரீ விருதும் வழங்கப்படுகிறது. இனம், தொழில், பதவி அல்லது பாலின வேறுபாடு இல்லாத அனைத்து நபர்களும் இந்த விருதுகளுக்கு தகுதியானவர்கள். இருப்பினும், மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளோடு, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்த விருதுகளுக்குத் தகுதியற்றவர்கள் ஆவர்.
எந்தெந்த பிரிவினருக்கு விருது:
கலை, சமூக சேவை, பொது விவகாரங்கள், அறிவியல் & பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில்,
மருத்துவம், இலக்கியம் & கல்வி , சிவில் சர்வீஸ், விளையாட்டு ஆகியவற்றி ல் பங்களிப்பு செய்து சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருது பொதுவாக மரணத்திற்குப் பின் வழங்கப்படுவதில்லை. இருப்பினும், மிகவும் தகுதியான சந்தர்ப்பங்களில், மரணத்திற்குப் பின் விருது வழங்குவதை அரசாங்கம் பரிசீலிக்கலாம். முந்தைய பத்ம விருது வழங்கப்பட்டதிலிருந்து குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் கழிந்தால் மட்டுமே ஒரு நபருக்கு உயர் வகை பத்ம விருது வழங்க முடியும். இருப்பினும், மிகவும் தகுதியான சந்தர்ப்பங்களில், விருதுகள் குழுவால் தளர்வு செய்யலாம்.
விருதாளர்களுக்கு என்ன கிடைக்கும்?
இந்த விருதுகள் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச்/ஏப்ரல் மாதங்களில் இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும். இதில் விருது பெற்றவர்களுக்கு குடியரசுத் தலைவர் கையொப்பமிட்ட சனத் (சான்றிதழ்) மற்றும் பதக்கமும் வழங்கப்படும். விருதாளர்களுக்கு பதக்கமும் வழங்கப்படுகிறது. விருது பெற்றவர்கள் விரும்பினால், அவர்கள் எந்த சடங்கு/அரசு விழாக்கள் போன்றவற்றின் போதும் அதனை அணியலாம். பரிசளிப்பு விழா நடைபெறும் நாளில் விருது பெற்றவர்களின் பெயர்கள் இந்திய அரசிதழில் வெளியிடப்படுகின்றன.
விண்ணப்பிப்பது எப்படி?
ஒவ்வொரு ஆண்டும் மே 1ம் தேதி முதல் செப்டம்பர் 15 வரையிலான காலத்தில் பரிந்துரை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மாநில / மத்திய அரசு, அமைச்சகங்கள், துறைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தனி நபர்கள், அமைப்புகள் போன்றவர்களிடமிருந்தும் பரிந்துரைகள் பெறப்படுகின்றன. தனிப்பட்ட நபர்கள் தாங்களாகவும் விண்ணப்பிக்க முடியும்
விருதாளர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி?
பத்ம விருதுகளுக்காக பெறப்பட்ட அனைத்து பரிந்துரைகளும் ஒவ்வொரு ஆண்டும் பிரதமரால் அமைக்கப்படும் பத்ம விருதுகள் குழுவினரால் பரிசீலிக்கப்படுகின்றன. பத்ம விருதுகள் குழுவானது கேபினட் செயலாளரின் தலைமையில் உள்ளது. இதில் உள்துறை செயலாளர், குடியரசு தலைவரின் செயலாளர் மற்றும் நான்கு முதல் ஆறு பிரபலங்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தக் குழுவின் பரிந்துரைகள் இந்தியப் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படுகின்றன. இதேபாணியில் தான் தற்போது நடிகர் அஜித் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒரு வருடத்தில் வழங்கப்படும் மொத்த விருதுகளின் எண்ணிக்கை (மரணத்திற்குப் பிந்தைய விருதுகள் மற்றும் என்ஆர்ஐ/வெளிநாட்டவர்கள்/ஓசிஐக்கள் தவிர) 120க்கு மேல் இருக்கக்கூடாது. இந்த விருதின் பெயரை வெற்றியாளர்கள் தங்களது பெயருக்கு பின்னொட்டாகவோ முன்னொட்டாகவோ பயன்படுத்த முடியாது.




















