மூன்றாவது அலை - அமெரிக்காவிடம் இருந்து கற்க வேண்டியது என்ன?
தடுப்பூசி இயக்கம் மக்கள் இயக்கமாக மாறி அமெரிக்காவில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் நான்காவது அலையில் அந்த தேசம் இறப்புகளைக் குறைத்திருக்கிறது. இதையே நாமும் கடைபிடித்து மூன்றாவது அலையில் நமது பக்க இழப்புகளை குறைக்க வேண்டும்.
அமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்றின் முதல் அலை மார்ச் முதல் ஜூன் வரை, இரண்டாவது அலை ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர், மூன்றாவது அலை நவம்பர் டிசம்பர் ஜனவரி பிப்ரவரி. நமக்கு முன்பாக இன்னும் சொல்லப்போனால் உலகத்தின் ஏனைய தேசங்களுக்கு முன்பு மூன்றாவது அலையைக் கண்ட தேசம் - அமெரிக்கா கீழ்க்காணும் படத்தைப் பார்க்கும் போது தினசரி மரண விகிதங்களின் படி மூன்றாவது அலையில் தான் அமெரிக்காவிற்கு ஒப்பீட்டளவில் அதிக உயிர்ச் சேதம் நிகழ்ந்தது திண்ணமாகத் தெரிகிறது.
முதல் அலையில் 1.5 லட்சம் மரணங்கள் இரண்டாவது அலையில் 1 லட்சம் மரணங்கள் மூன்றாவது அலையில் 3.5 லட்சம் மரணங்கள் நிகழ்ந்துள்ளன இரண்டாவது அலையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக மரணங்களை மூன்றாவது அலை அந்த தேசத்தில் ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிய முடிகின்றது. அமெரிக்காவின் இந்த பேட்டர்ன் பார்க்கும் பொழுது முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் இந்தியாவிற்கு கிடைத்தது போல ஐந்து மாதங்கள் ஓய்வு கிடைக்கவில்லை. தொற்று எண்ணிக்கை அதள பாதாளத்துக்கு செல்லாமலே இருந்திருக்கிறது. எனவே சமூகத்தில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகமான அளவில் இருக்கும் போதே அடுத்த அலையும் உருவாகி இருக்கிறது. இதற்கான முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது
" சமூக இடைவெளி "
" தனி மனித இடைவெளி"
" முகக்கவசம்" போன்றவற்றிற்கு அந்த நாட்டின் முன்னாள் அதிபர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதையே அந்த நாட்டின் பெரும்பான்மை மக்களும் வழிமொழிந்தனர். சில மாகாணங்களில் கொரோனா தொற்று பெற்ற இளைஞ இளைஞிகள் தங்களது நண்பர்களை கூட்டி கொரோனா பார்ட்டி நடத்தும் அளவு அங்கு கொரோனாவை பொருட்டாக மதிக்காத தன்மை இருந்தது. அனைத்து மாகாணங்களிலும் ஒருங்கிணைந்த கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளான சமூக இடைவெளி தனிமனித இடைவெளி முகக்கவசம் போன்றவற்றை ஒருங்கே கடைபிடிக்கவில்லை.
இரண்டாம் அலை உச்சத்தில் இருந்து அடுத்த அலை எதிர்பார்க்கப்பட்ட நிலையிலும் 16 மாகாணங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படாமல் இருந்தது. முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்ட இடங்களில் சில இயக்கங்கள் அதற்கு எதிராக போராட்டம் செய்தனர். ட்ரம்ப் கட்சி ஆளாத சில மாகாணங்களில் சிறிய அளவில் லாக் டவுன் போடப்பட்டாலும் எதிர்ப்பை கிளப்பினர். இதனால் கூட்டாக தேசமாக மூன்றாவது அலையை தடுப்பதற்கான யுக்திகளில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் தலைமையில் அமெரிக்கா சரியான முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை. இன்னும் சொல்லப்போனால் இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த போது சில மாகாணங்களில் இருந்த ஊரடங்குகளும் அந்த இடங்களில் தொற்று எண்ணிக்கை மிகவும் குறையும் முன்னமே தளர்த்தப்பட்டன . அனைவரும் எதிர்பார்த்தபடி மூன்றாவது அலை அங்கு ஏற்பட்டது 2வது அலையின் உச்சத்தில் இருந்து 5 மாதங்களில் மூன்றாவது அலை உச்சம் நிகழ்ந்ததது. இதுவரை கூறியது அமெரிக்கா குறித்த கசப்பு செய்திகள். நாம் கடைபிடிக்கக் கூடாதவை.
இனி வருபவை நாம் அமெரிக்காவிடம் இருந்து கடைபிடிக்க வேண்டியவை மூன்றாவது அலை தந்த அடியில் இருந்து பாடம் கற்றது அமெரிக்க தேசம். முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர், வியட்நாம் போர் ஆகிய மூன்றையும் சேர்த்து அந்த தேசம் இழந்த ராணுவ வீரர்களை விடவும் அதிகமான மக்களை ஒரே வருடத்தில் கொரோனாவுக்கு இழந்தது. சில பெருநகர வீதிகளில் முதியோர்களே காணப்படாத நிலை உருவானது. ட்ரம்ப் அவர்களிடம் இருந்து ஜோ பைடனிடம் ஆட்சிப்பொறுப்பு கை மாறியது. கூடவே அடுத்த அலையில் இழப்பைக் குறைக்கும் பொறுப்பும் சேர்ந்தது. எதைச்செய்து அவர்கள் நான்காவது அலையின் தாக்கத்தை மட்டுப்படுத்தி வருகிறார்களோ?
அது தான் நமக்கான படிப்பினை அமெரிக்காவில் தடுப்பூசி இயக்கம் 10 டிசம்பர், 2020 ஆரம்பித்தது. ஜோ பிடன் அரசாங்கம் ஜனவரி 20,2021 பொறுப்பேற்றது ஜோ பிடன் தனது அலுவலில் நூறு நாட்களுக்குள் 10 கோடி பேருக்கு தடுப்பூசியை வழங்குவோம் என்று குறிக்கோள் அறிவித்து செயல்பட்டார். அந்த இலக்கை மார்ச் 19,2021 அன்றே அடைந்தது தேசம். அடுத்து அதே நூறு நாட்களுக்குள் 20 கோடி பேருக்கு தடுப்பூசி என்று அறிவித்தார். அந்த இலக்கும் ஏப்ரல் 21,2021 அன்று அடையப்பட்டது. தற்போது புதிய இலக்காக ஜூலை 4,2021க்குள் 70% அமெரிக்க ப்ரஜைகளுக்கு தடுப்பூசி கிடைக்கச்செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று சபதமேற்றிருக்கிறார்.
தற்போது வரை ( மே 29,2021 வரை) ஒரு டோஸ் தடுப்பூசியை அந்த நாட்டில் 50% பேர் பெற்று விட்டனர். இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் பெற்றவர்கள் -40% பேர், அந்நாட்டில் ஏப்ரல் 19,2021 முதல் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. மே 10,2021 தொட்டு 12 முதல் 15 வயது வரை தடுப்பூசி வழங்க அவசர கால முன்அனுமதி வழங்கப்பட்டு விட்டது. அந்நாட்டில் நான்காவது அலை மார்ச் மாதம் தொட்டு அடித்து வருகிறதுஆனால் மூன்றாவது அலையின் உச்சத்தில் ஒரு நாளைக்கு 2.26 லட்சம் தொற்றாளர்களும் 4000+ மரணங்களும் பதிவு செய்யப்பட்டு வந்த சூழ்நிலையில் நான்காவது அலையில் ஒரு நாளைக்கு 66000 தொற்றாளர்களும் 800+ மரணங்களுமே பதிவு செய்யப்பட்டு வருகின்றன. நான்காவது அலையின் இறங்கு முகத்தில் இருக்கும் அமெரிக்காவில் 200+ மரணங்களே பதிவு செய்யப்பட்டு வருகின்றன. தடுப்பூசி அதிகமாக போடப்பட்ட மாகாணங்களுள் நோய் பரவல் நிலையும் மரண விகிதங்களும் குறைவாக உள்ளது.
அமெரிக்காவின் வழி நாம் கற்க வேண்டிய பாடங்கள்
- இரண்டாவது அலை ஓய்ந்தாலும் மூன்றாவது அலை ஒன்று உண்டு என்று நம்ப வேண்டும்
- அந்த மூன்றாவது அலை இரண்டாவது அலை ஏற்பட்டதில் இருந்து மூன்று முதல் ஐந்து மாதங்களில் நிகழலாம்
- மூன்றாவது அலை இரண்டாவது அலையை விட பலமிக்கதாக வீரியமிக்கதாக இருக்கலாம்.
- மக்கள் நிச்சயம் பெருந்தொற்று கால நடவடிக்கைகளான சமூக இடைவெளி/ தனிமனித இடைவெளி / முகக்கவசத்தை கைவிடக்கூடாது
- அரசாங்கங்கள் அதிகப்படியான தளர்வுகளை நோய் தொற்று தாக்கம் குன்றிய நிலையை அடையும் வரை வழங்காமல் இருப்பது நல்லது
- மாநிலங்கள் மற்றும் ஒன்றியத்துக்கு இடையே ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் இருத்தல் வேண்டும். மாநிலங்களுக்கு இடையே தடுப்பு நடவடிக்கைகளுள் ஏற்றத்தாழ்வு நிலை இருத்தல் கூடாது.
- நாட்டின்/ மாநிலத்தின் தலைமை அமைச்சர் கொரோனா குறித்த அறிவியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பாராயின் அந்நாட்டின் மக்களின் உயிர் காக்கப்படுகின்றது. அதுவே அலட்சியம் மிக்க ஆட்சியாளரால் நாட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை அடுத்த பகுதியில் இன்னும் உதாரணங்களுடன் கூறலாம்.
- தடுப்பூசி இயக்கம் மக்கள் இயக்கமாக மாறி அமெரிக்காவில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் நான்காவது அலையில் அந்த தேசம் இறப்புகளைக் குறைத்திருக்கிறது. இதையே நாமும் கடைபிடித்து மூன்றாவது அலையில் நமது பக்க இழப்புகளை குறைக்க வேண்டும்.
- ஊரடங்கு தளர்வுகளை பொருளாதாரக் காரணங்களுக்காக அரசு அறிவித்தாலும் தயவு கூர்ந்து நாம் அனைவரும் திருமணங்கள் / இறுதி சடங்குகள் போன்றவற்றை கூட்டமாக நடத்தக்கூடாது. முடிந்த அளவு தேவையற்ற பயணங்களை குறைத்து விட வேண்டும்.
- தடுப்பூசிகள் குறித்த அறிவியல் விழிப்புணர்வை வளர்த்துக் கொண்டு 18+ வயதினருக்கு தடுப்பூசியை விரைவில் கொண்டு சேர்க்க வேண்டும்.
அரசாங்கங்கள் தடுப்பூசி உற்பத்தி / கொள்முதல் / இறக்குமதி போன்றவற்றை அதிகரித்து மூன்றாவது அலையின் தாக்கத்தை குறைத்திட வேண்டும். கடுமையான மூன்றாவது அலையை சந்தித்து அதில் இருந்து பாடம் பெற்று நான்காவது அலையில் பாதிப்பைக் குறைத்து வரும். அமெரிக்காவிடம் நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறதல்லவா? அடுத்த பகுதியில் பிரேசலின் கதை காண்போம்