Amit Shah: ஒருநாள் முன்னதாகவே தமிழகம் வருகிறார் அமித் ஷா..! காரணம் என்ன?
உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கனவே திட்டமிட்டதை காட்டிலும், ஒருநாள் முன்னதாகவே தமிழகம் வருகிறார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கனவே திட்டமிட்டதை காட்டிலும், ஒருநாள் முன்னதாகவே தமிழகம் வருகிறார்.
அமித் ஷா சென்னை வருகை:
அதன்படி ஏற்கனவே வெளியான தகவலின்படி, வரும் 11ம் தேதி அமித் ஷா தமிழகம் வருவதாக இருந்தது. ஆனால், நாளையே அவர் தமிழகம் வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை இரவு 9 மணிக்கு சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, கிண்டியில் உள்ள ஐடிசி நட்சத்திர ஓட்டலில் தங்க உள்ளார். அப்போது முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைதொடர்ந்து வரும் 11ம் தேதி கோவிலம்பாக்கத்தில் நடைபெற உள்ள, பாஜகவின் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அதோடு, பிற்பகலில் வேலூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்திலும் அமித் ஷா பங்கேற்கிறார்.
அமித் ஷாவை சந்திக்கும் ஈபிஎஸ்:
சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க நேரம் கேட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக - அதிமுக கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு இருக்கும் எனக் கருதப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமியுடன், அமித்ஷா ஆலோசனை நடத்தியதன் தொடர்ச்சியாக இந்த கூட்டம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
என்ன ஆலோசிக்கப்படும்?
இருவருக்கும் இடையே கடந்த முறை நடந்த சந்திப்பின்போது, ஓபிஎஸ் உடன் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தியதோடு, நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசித்ததாகவும், பாஜக போட்டியிடவுள்ள தொகுதிகளை முன்கூட்டியே இறுதி செய்து தரவேண்டும் என்றும் அமித் ஷா அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. அந்த அறிவுறுத்தல்கள் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக, நாளைய சந்திப்பின் போது அமித் ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓபிஎஸ் உடன் சந்திப்பு:
இதனிடையே, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களும் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, ஓபிஎஸ்-ன் அரசியல் எதிர்காலம் தொடர்பாக இருதரப்பும் ஆலோசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாகிகள் உடன் ஆலோசனை:
தொடர்ந்து 11ம் தேதி நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதிகளை கைப்பற்றுவதற்கான முக்கிய அறிவுறுத்தல்களையும், ஆலோசனைகளையும் பாஜக நிர்வாகிகளுக்கு அமித் ஷா வழங்குவார் எனத் தெரிகிறது. அதோடு, தமிழகத்தில் இது வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த தகவலை அமித் ஷா கேட்டறிவார் என தெரிகிறது. அதைதொடர்ந்து, வேலூர் பள்ளிகொண்டா அருகே கந்தநேரியில்நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, வி.கே.சிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.