"சிக்கன் சாப்பிடல" பிரச்னையை கிளப்பிய பாஜக.. பேக் அடித்த முதல்வர்!
வன பாதுகாப்பு சட்டம், 1972இன் பாதுகாக்கப்பட்ட காட்டுக்கோழியை அடித்து கொன்று, முதலமைச்சர் கலந்து கொண்ட விருந்தில் உணவாக பரிமாறப்பட்டதாக பாஜக சர்ச்சையை கிளப்பி வருகிறது.
வேட்டையாட தடை செய்யப்பட்ட காட்டுக்கோழியை சாப்பிட்டதாக ஹிமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு மீது பாஜக குற்றச்சாட்டு சுமத்திய நிலையில், அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஹிமாச்சல பிரதேச முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சுக்விந்தர் சிங் சுகு, பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். டிக்கர் என்ற கிராமத்தில் உள்ளூர் மக்களுடன் இணைந்து ஒரு விருந்தில் அவர் கலந்து கொண்டார்.
சிக்கன் சாப்பிட்டதால் வந்த வினை:
வன பாதுகாப்பு சட்டம், 1972இன் பாதுகாக்கப்பட்ட காட்டுக்கோழியை அடித்து கொன்று, முதலமைச்சர் கலந்து கொண்ட விருந்தில் உணவாக பரிமாறப்பட்டதாக பாஜக சர்ச்சையை கிளப்பி வருகிறது. அந்த விருந்தில் சுகு சாப்பிடும் வீடியோவை வெளியிட்ட பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெய்ராம் தாகூர், அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
"பாதுகாக்கப்பட்ட உயிரினமான காட்டுக்கோழிகளை சாப்பிடுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இப்படி இருக்க, கோழிக்கறி தரப்படும் என மெனுக்களை அச்சிட்டு, பின்னர் தனது அமைச்சர்கள் அதை தமக்கு முன்னால் ருசிப்பதைப் பார்த்து மகிழ்கிறார். இதைத்தான் சிஸ்டம் மாற்றம் என்கிறீர்களா? #பிக்னிக்கில் உள்ள அரசு #2_ஆண்டு_அமைப்பு_சீர்கேடு" என ஜெய்ராம் தாகூர் சாடியிருந்தார்.
முதல்வர் விளக்கம்:
இதற்கு பதிலடி அளித்துள்ள முதலமைச்சர் சுக்விந்தர் சிங், "நடக்காத ஒன்றைப் பற்றி நான் என்ன சொல்ல வேண்டுமா? அது காட்டுக் கோழி அல்ல. அது அவர்களின் பழங்குடி கலாச்சாரம். நான் அசைவ உணவை உட்கொள்வதில்லை என்று சொன்னபோது, அவர்கள் இது கடையில் வாங்கும் கோழி அல்ல.
#WATCH | Dharamshala, Himachal Pradesh: On reports of 'wild chicken' served to him, CM Sukhvinder Singh Sukhu says, "What should I say about something that did not happen? It was not a wild chicken, it is their tribal culture. When I said I don't consume non-veg food, they said… pic.twitter.com/4t0Sa5w76G
— ANI (@ANI) December 14, 2024
இது எங்களின் கிராமத்தைச் சேர்ந்தது, நாட்டுக் கோழி என்றார்கள். நாங்கள் அங்கு சாப்பிட செல்லவில்லை. மக்கள் பிரச்னைகளை கேட்க சென்றோம். பாஜகவுக்கு முன்னிலைப்படுத்த எந்த பிரச்சனையும் இல்லை அதனால் இப்படி வினோதமான பிரச்னைகளை கையில் எடுக்கிறார்கள்" என்றார்.