ஹிஜாப் விவகாரம் : விளக்கமளிக்க மறுக்கும் மத்திய அரசு? மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
ஹிஜாப் பிரச்னை குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க மறுப்பதாக தெரிவித்து எதிர்க்கட்சியினர் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகாவில் இரு தரப்பினர் தொடர்ந்து நடத்தி வரும் போராட்டங்கள் தொடர்பாக மக்களவையில் எதிரொலித்துள்ளது. ஹிஜாப் பிரச்னை குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க மறுப்பதாக தெரிவித்து எதிர்க்கட்சியினர் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஹிஜாப் விவகாரம் :
கர்நாடக மாநிலத்தின் உடுப்பி பகுதியில் முஸ்லிம் மாணவிகள் அரசு மகளிர் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உடுப்பி, குந்தாப்பூர் பியுசி கல்லூரியில் முஸ்லிம் மாணவிகளுக்கு, வளாகத்துக்குள் ஹிஜாப் அணிந்து வர 5 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து மாணவிகள் வாயிற்கதவுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து கல்லூரிகளில் மத ரீதியான அடையாளத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றுகூறி பந்தார்கர் கல்லூரி ஆண் மாணவர்கள், இந்துத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் கழுத்தில் காவி நிறத் துண்டை அணிந்து வந்தனர். இதற்கிடையே பிப்.5 அன்று இந்து மாணவிகளும் கழுத்தில் காவி வண்ணத் துண்டை அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால் இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று (பிப்.7) கல்லூரி வளாகத்துக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர அனுமதி அளிக்கப்பட்டது. அதேநேரத்தில் அவர்கள் தனியாக வேறோரு வகுப்பில் அமர வைக்கப்படுவர். அவர்களுக்குக் கற்பித்தல் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்ந்து பதற்ற நிலையிலேயே உள்ளது.
துப்பாக்கிச் சூடு:
பல இடங்களில் பல்வேறு குழுக்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக கர்நாடகாவின் தாவணகெரே ஹரிகர் பகுதியில் உள்ள அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் மீது ஒரு பிரிவு மாணவர்கள் தாக்குதலை நடத்தினர். இதனால் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு போலீசார் மாணவர்கள் கூட்டத்தை கலைத்தனர். மாணவர்களின் இந்த போராட்டத்தால் பொதுமக்களின் வாகனம் சில சேதமடைந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்