“இதுதான் மிகச்சிறந்த பரிசு...” - பிறந்தநாளில் அசத்திய ரசிகர்கள்: ஆனந்தக் கண்ணீர் சிந்திய நோரா ஃபதேஹி
தனது பிறந்தநாளன்று 360 குழந்தைகளுக்கு உணவளித்து ரசிகர்கள் கொண்டாடியதை அறிந்த நடிகை நோரா ஃபதேஹி நெகிழ்ச்சியில் உள்ளார்.
தனது பிறந்தநாளன்று 360 குழந்தைகளுக்கு உணவளித்து ரசிகர்கள் கொண்டாடியதை அறிந்த நடிகை நோரா ஃபதேஹி நெகிழ்ச்சியில் உள்ளார்.
கனடா நாட்டு நடிகை நோரா ஃபதேஹி. இவர் இந்திய திரைத்துறையிலும் நடித்துவருகிறார். இவருக்கு பலர் ரசிகர்களாக இருக்கின்றனர்.
நோரா ஃபதேஹி சமீபத்தில் பஞ்சாபி பாடகர் குரு ரந்தவாவுடன் டான்ஸ் மேரி ராணி இசை வீடியோவில் தோன்றினார். இந்த வீடியோவும் பாடலும் பார்வையாளர்கள் மத்தியி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் சமூகவலைதளங்களில் அதுவும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மிகவும் விறுவிறுப்பாக இயங்குபவர். இன்ஸ்டாவில் இவருக்கு 37.6 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருக்கின்றனர். இவர் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது அதை ரசிகர்கள் வைரலாக்குவதும் வழக்கமான நிகழ்வு.
இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி நோரா ஃபதேஹி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அன்றைய தினம் நோரா ரசிகர்கள் ஒன்றுகூடி 300 ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளித்து தங்கள் உள்ளம் கவர்ந்த நடிகைக்கு வாழ்த்து கூறினர். இதற்காக தாகம் ஃபவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் அவர்கள் கைகோர்த்தனர். இந்தத் தகவல் அறிந்து நோரா நெகிழ்ந்து போனார்.
இதனையடுத்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில், "நான் அழுது கொண்டிருக்கிறேன். எனக்கு இதுவரை கிடைந்த பிறந்தநாள் பரிசுகளிலேயே இதுதான் மிகவும் சிறந்த பரிசு. எனது ரசிகர் மன்றங்களுக்கு நன்றி. என் பெயரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளித்துள்ளீர்கள். எனது ரசிகர்கள் இவ்வளவு நல் உள்ளம் கொண்டவர்கள். மிகவும் பெருந்தன்மை கொண்டவர்கள் என்பதை அறிவதில் மகிழ்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி. இது விலைமதிப்பற்ற பரிசு. கடவுள் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக" என்று பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
கடந்த மே மாதம் நேன்டட் நகரைச் சேர்ந்த நோராவின் தீவிர ரசிகர் ஒருவர் நோராவின் முகத்தை தனது புஜத்தில் டாட்டூ குத்திக் கொண்டதோடு, 1000க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கி அசத்தினார்.
நோரா ஃபதேஹி உலகளவில் ஒரு ஃபேஷன் ஐகானாக அறியப்படுகிறார். அவரது நடனத்துக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. பாலிவுட்டில் அவர் ஆடிய ஐட்டம் சாங்குகள் அத்தனையும் மெகா ஹிட்.
நடிகை மற்றும் நடனக் கலைஞரான நோரா ஃபதேஹி அழகுக்கும் திறமைக்கும் மட்டும் அறியப்பட்டவர் அல்ல. அண்மைக்காலமாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருடன் இவரது பெயர் கிசுகிசுக்கப்படுகிறது. இதனால் அமலாக்கத்துறை விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார் நோரா ஃபதேஹி. அழகு இருக்கும் இடத்தில் சர்ச்சை இல்லாவிட்டால் எப்படி?