Maha Kumbh: மகா கும்பமேளா, 52 கோடி பேர் முங்கி எழுந்த கங்கை, குவிந்து கிடக்கும் மல கழிவு - அரசு அறிக்கை
Maha Kumbh Ganga: மகாகும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜின் பல பகுதிகளில், கங்கை நதியின் தண்ணீர் குளிப்பதற்கு ஏற்றதாக இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Maha Kumbh Ganga: மகாகும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜில் பாயும் கங்கை நதியில், அதிகப்படியான மனித கழிவு பாக்டீரியாக்கள் இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
மகா கும்பமேளா 2025:
ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடைபெறும் மகாகும்பமேளா, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 13ம் தேதி முதல், 52 கோடிக்கும் அதிகமான மக்கள் கங்கை நதியில் புனித நீராடியுள்ளனர். இதில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பானி மற்றும் அதானி குடும்பத்தினர் என பல விவிஐபிக்களும் அடங்குவர். தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கங்கையில் புனித நீராட பிரயாக்ராஜை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தான் பிரயாராஜ் கங்கையில் "அதிக அளவு மல பாக்டீரியாக்கள்" இருப்பது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் கவலை தெரிவித்துள்ளது.
குளிக்க ஏதுவாக இல்லாத கங்கை நதி
பிரயாக்ராஜின் பல்வேறு இடங்களில் குளிப்பதற்கு ஏற்ற தரத்திற்கு கங்கை நீர் இணங்கவில்லை என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB), தேசியச் பசுமை தீர்ப்பாயத்தில் சமர்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்பட, மலக் கோலிஃபார்ம் என்பது கழிவுநீர் மாசுபாட்டின் குறிகாட்டியாகும். 100 மில்லிக்கு 2,500 யூனிட்கள் என்ற அனுமதிக்கப்பட்ட வரம்பைக் கொண்டுள்ளது. ஆனால், ஆற்று நீரின் தரம், பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்காணிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் மல கோலிஃபார்ம் (FC) காரணமாக, குளிப்பதற்கான தரத்துடன் நீர் ஒத்துப்போகவில்லை. மஹாகும்பமேளாவின் போது, புனித நீராடும் நாட்கள் உட்பட, பிரயாகராஜில் உள்ள ஆற்றில் பலர் குளிப்பதால், இறுதியில் மல செறிவு அதிகரிக்கும்" என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.
விசாரணை ஆணையம் அதிருப்தி:
பிரயாக்ராஜில் உள்ள கங்கை மற்றும் யமுனை நதிகளில் கழிவுநீர் வெளியேற்றத்தைத் தடுப்பது தொடர்பான பிரச்சினையை. தேசிய பசுமை தீர்ப்பாயம் தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, தலைமையிலான 3 பேர் கொண்ட குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கையை ஆய்வு செய்த ஆணையம், விரிவான நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்ற தீர்ப்பாயத்தின் முந்தைய உத்தரவை உத்தரபிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியம் (UPPCB) பின்பற்றவில்லை என்று அதிருப்தி தெரிவித்தது.
மேலும், உத்தரபிரதேச மாநில வழக்கறிஞர் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையை ஆராய்ந்து பதில் மனு தாக்கல் செய்ய ஒரு நாள் அவகாசம் அளித்தது. மேலும், நாளை நடைபெற உள்ள விசாரணையில் கங்கை நதியின் நீரின் தரத்தை பராமரிக்கும் பொறுப்புள்ள UPPCB உறுப்பினர் செயலாளரும், சம்பந்தப்பட்ட மாநில அதிகாரியும் காணொலி முறையில் ஆஜராக வேண்டும்" என்றும் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.





















