ரூ.40 லட்சம் சம்பளம்...ஆனா, 8 நிமிஷம் மட்டும்தான் வேலை...முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய ஐ.ஏ.எஸ் அதிகாரி..!
ஆவண காப்பகத்துறையில் நாள் ஒன்றுக்கு 8 நிமிடங்கள் மட்டுமே வேலை இருப்பதாகவும் ஆனால் தனக்கு ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் தரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணிச்சுமை அதிகமாக இருப்பதாக நிறைய நபர்கள் புலம்புவதை கேட்டிருக்கிறோம். ஆனால், ஒரு ஐஏஎஸ் அதிகாரி, தனக்கு பணி குறைவாக இருப்பதாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
ஹரியாணாவில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியாக பதவி வகிப்பவர் அசோக் கெம்கா. இந்தாண்டு, ஜனவரி 9ஆம் தேதி முதல், ஆவண காப்பக துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக கெம்கா பணியாற்றி வருகிறார். இவர், அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ஆவண காப்பகத்துறையில் நாள் ஒன்றுக்கு 8 நிமிடங்கள் மட்டுமே வேலை இருப்பதாகவும் ஆனால் தனக்கு ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் தரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மாநில லஞ்ச ஒழிப்பு துறையின் தலைவர் பதவியை தனக்கு அளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனவரி 23ஆம் தேதி அவர் எழுதிய கடிதத்தில், "2023ஆம் ஆண்டு, ஜனவரி 9ஆம் தேதி முதல் ஆவணக் காப்பகத் துறை எனக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் துறையின் ஆண்டு பட்ஜெட் ரூ. 4 கோடிகள். மொத்த மாநில பட்ஜெட்டில் 0.0025%க்கும் குறைவு.
கூடுதல் தலைமைச் செயலாளராக எனது ஆண்டு ஊதியம் ரூ. 40 லட்சம். இது துறையின் மொத்த பட்ஜெட்டில் 10% ஆகும். ஆவண காப்பகத்தில் வாரத்திற்கு ஒரு மணி நேரம் கூட பணி இருப்பதில்லை. மறுபுறம், சில அதிகாரிகள் பல பொறுப்புகளுடன் பல்வேறு துறைகளில் அதிக பணி சுமையுடன் இருக்கிறார்கள்.
இதன் காரணமாக அவர்கள் எப்போதும் இக்கட்டான சூழலில் பணிபுரிய வேண்டியிருக்கிறது. ஏற்றத்தாழ்வான பணிச்சுமை மக்கள் பணிக்கு உதவாது. சிவில் சர்வீசஸ் போர்டு சட்டப்பூர்வ விதிகளின்படி செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு அதிகாரியின் நேர்மை, திறமை மற்றும் அறிவுத்திறனைக் கருத்தில் கொண்டு உங்களுக்கு முன் பரிந்துரைகளை வழங்க வேண்டும்.
ஊழல் என்பது அனைத்து மட்டத்திலும் இருப்பது உங்களுக்குத் தெரியும். ஊழலைப் பார்க்கும்போது என் உள்ளம் புண்படுகிறது. ஊழல் என்ற புற்றுநோயை வேரறுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், எனது வாழ்க்கையை மக்கள் சேவைக்கு தியாகம் செய்துள்ளேன்.
அரசின் கொள்கையின்படி ஊழலை ஒழிக்காமல், ஒரு குடிமகன் தனது உண்மையான திறனை அடைய வேண்டும் என்ற கனவை ஒருபோதும் நனவாக்க முடியாது. அன்றாட பிழைப்புக்காகப் போராடும் நிலைக்குத் தள்ளப்படுவான். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் நான் எப்போதும் முன்னணியில் இருக்கிறேன்.
ஊழலை வேரறுக்க அரசின் முக்கிய அங்கமாக லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளது. எனது வாழ்க்கையின் முடிவில், ஊழலை வேரறுக்க லஞ்ச ஒழிப்புத்துறையின் தலைவராக பணியாற்ற விரும்புகிறேன். ஒரு வாய்ப்பு கிடைத்தால், ஊழலுக்கு எதிரான உண்மையான போர் இருக்கும் என்றும், குற்றவாளி எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும் வலிமை வாய்ந்தவராக இருந்தாலும் அவர்களை விட்டுவிட மாட்டேன் என உறுதி அளிக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
கடந்தாண்டு, ஹரியாணா மாநில அமைச்சர் அனில் விஜ், கெம்காவுக்கு புகழாரம் சூட்டினார். அமைச்சரின் பாராட்டை முதலமைச்சர் கட்டார் வழிமொழிந்திருந்தார். கடந்த ஜனவரி 9ஆம் தேதி, நான்காவது முறையாக ஆவண காப்பகத் துறைக்கு கெம்கா பணி மாற்றம் செய்யப்பட்டார். இவர், மொத்தமாக 55 முறை பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.