தொடரும் புதிய ட்ரெண்ட்... பிறந்த ஒருமாத பெண் குழந்தைக்கு புயலின் பெயரை சூட்டிய இளம் பெற்றோர்..!
பைபர்ஜாய் புயலின் பெயரை பிறந்த தனது ஒரு வயது பெண் குழந்தைக்கு சூட்ட குஜராத்தில் பெண் ஒருவர் முடிவு செய்திருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
பிறக்கும் குழந்தைகளுக்கு இயற்கை பேரிடர்களின் பெயர்களை வைப்பது புதிய ட்ரெண்டாக மாறி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மேற்கு கடற்கரை பகுதிகளை அச்சுறுத்தி வரும் பைபர்ஜாய் புயலின் பெயரை பிறந்த தனது ஒரு வயது பெண் குழந்தைக்கு சூட்ட குஜராத்தில் பெண் ஒருவர் முடிவு செய்திருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
தொடரும் புதிய ட்ரெண்ட்:
புயலின் காரணமாக தற்போது கட்ச் மாவட்டம் ஜகாவில் உள்ள தற்காலிக இல்லத்தில் அந்த பெண் குழந்தையின் குடும்பம் தங்கியுள்ளது. குஜராத்தில் இன்று புயல் கரையை கடக்க உள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு பிறந்த குழந்தைக்கு பைபர்ஜாய் என்ற புயலின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. முன்னதாக, தித்லி, ஃபானி, குலாப் போன்ற புயலின் பெயர்கள் பிறந்த குழந்தைகளுக்கு சூட்டப்பட்டது. இந்த பெயர் வங்காளதேசத்தால் வழங்கப்பட்டது. உலக வானிலை அமைப்பு (WMO) நாடுகளால் 2020இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு வெப்பமண்டல சூறாவளி படுகையில் உள்ள புயல்களுக்கும் பெயரிடுவதற்கான வழிகாட்டுதல்களை உலக வானிலை அமைப்பு வகுத்துள்ளது.
பிறந்த ஒருமாத பெண் குழந்தைக்கு புயலின் பெயர சூட்டிய பெற்றோர்கள்:
"வெப்பமண்டல புயல்கள் ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் நீடிக்கும். அதாவது பல புயல்கள் ஒன்றாக தாக்கலாம். வானிலை முன்னறிவிப்பாளர்கள் குழப்பத்தைத் தவிர்க்க ஒவ்வொரு வெப்பமண்டல புயலுக்கும் ஒரு பெயரைக் கொடுக்கிறார்கள். வட இந்தியப் பெருங்கடலில் உள்ள நாடுகள் 2000 ஆம் ஆண்டில் வெப்பமண்டல புயல்களுக்கு பெயரிட ஒரு புதிய முறையைப் பயன்படுத்தத் தொடங்கின.
பெயர்கள், நாடுகள் வாரியாக அகர வரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன. பாலினம் கடந்தே பெயர் வைக்கப்படுகிறது. பொதுவான விதி என்னவென்றால், உலக வானிலை அமைப்பின் உறுப்பினர்கள் அடங்கிய தேசிய வானிலை அமைப்பே புயலுக்கான பெயர்களை பரிந்துரை செய்கிறது.
அந்தந்த பிராந்திய வானிலை அமைப்புகளால் அவர்களின் வருடாந்திர அமர்வுகளில் பரிந்துரை செய்யப்படும் புயலின் பெயர்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட வேண்டும். வெப்பமண்டல புயல்களுக்கு பெயரிடும் நடைமுறை பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இது எச்சரிக்கை செய்திகளில் புயல்களை விரைவாக அடையாளம் காண உதவும். ஏனெனில், எண்கள் மற்றும் தொழில்நுட்ப சொற்களை விட பெயர்கள் நினைவில் கொள்வது மிகவும் எளிதாக இருக்கும்" என உலக வானிலை அமைப்பின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இயற்கை பேரிடர்களின் பெயர்களை மட்டும் இந்தியர்கள், தங்களின் குழந்தைக்கு வைப்பதில்லை. கொரோனா பெருந்தொற்று காலத்தில், உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு கொரோனா என்று பெயரிடப்பட்டது. அதுமட்டும் இன்றி, ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் உள்ள மற்ற இரண்டு குழந்தைகளுக்கும் கொரோனா என பெயர் சூட்டப்பட்டது.
கொரோனா உச்சத்தில் இருந்தபோது, வைரஸ் பரவலை தடுப்பதற்காக லாக்டவுன் விதிக்கப்பட்டது. அப்போது, ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் திரிபுராவில் சிக்கித் தவித்தனர். அப்போது, அந்த தம்பதியினர், தங்களின் ஆண் குழந்தைக்கு லாக்டவுன் என பெயர் சூட்டினர்.