திருமணமான பெண்ணுக்கு சொத்து வழங்கலாமா..? குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து..!
பெண்ணுக்கு திருமணம் ஆவதாலேயே குடும்பத்தில் அவர்களின் நிலை மாறாது என குஜராத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
குடும்பத்தில் மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டால், அவருக்கு சொத்து எதுவும் கொடுக்கக்கூடாது என்ற எண்ணம் மாற வேண்டிய தருணம் இது என குஜராத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சொத்து உரிமை:
சொத்து தகராறு வழக்கில் சகோதரி பதிலளிக்க கோரி ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் மற்றும் நீதிபதி அசுதோஷ் சாஸ்திரி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த கருத்தினை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் குடும்ப சொத்தினை வழங்க கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், சொத்துக்கான உரிமையை தனது சகோதரி விட்டு கொடுத்துவிட்டாரா என்பது குறித்து தெளிவுப்படுத்தவில்லை. ஏனெனில், சொத்து உரிமை வேண்டாம் என கூறும் உயில் பதிவு செய்யப்படவில்லை. இதற்கு தன்னுடைய சகோதரி பதில் அளிக்க வேண்டும் என அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
திருமணம் முடிந்துவிட்டால் சொத்து..?
வழக்கை விசாரித்த நீதிபதிகள், "குடும்பத்தில் உள்ள மகளுக்கோ, சகோதரிக்கோ திருமணம் முடிந்து விட்டால், அவருக்கு எதையும் கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் மாற வேண்டும். அவர் உங்களுடன் பிறந்த சகோதரி. இப்போது திருமணமாகிவிட்டதால் குடும்பத்தில் அவளுடைய நிலை மாறாது. எனவே, இந்த எண்ணம் போக வேண்டும்" என்றார்.
சொத்து உரிமையை விட்டு கொடுத்துவிட்டதாக கூறப்படும் நபர், மனுதாரரின் சகோதரரா? சகோதரியா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், சகோதரி என பதில் அளித்தார்.
மனநிலையை மாற்றுங்கள்:
இதை கேட்ட நீதிபதி, "இப்போது அவருக்கு எதுவும் கொடுக்க நீங்கள் தயாராக இல்லை அல்லவா? சகோதரிக்கு கல்யாணம் ஆனதால் நான் எதுக்கு இப்போ கொடுக்கணும் என மனநிலை உள்ளது. இந்த மன நிலை மாற வேண்டும்" என்றார்.
இதை தொடர்ந்து, வழக்கை மூன்று வாரத்திற்கு குஜராத் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதில், கவனிக்க வேண்டியது,என்னவென்றால், கர்நாடக உயர் நீதிமன்றம், இதே மாதிரியான கருத்தை சமீபத்தில் தெரிவித்திருந்தது.
Need to change mindset of people that once daughter is married she should not be given any property: Gujarat High Court
— Bar & Bench (@barandbench) January 13, 2023
report by @NarsiBenwal https://t.co/xXESTglafz
"திருமணம் ஆனாலும் ஆகாமல் இருந்தாலும் மகன், மகனாகவே இருக்கும்போது திருமணம் ஆனாலும் ஆகாமல் இருந்தாலும் மகளும் மகளாகவே தொடர்வார். திருமணம் என்ற செயல் மகனின் நிலையை மாற்றவில்லை என்றபோது மகளின் நிலையும் மாறாது" என கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.