Rahul Gandhi : ராகுல் காந்தி அவதூறு வழக்கு...விசாரிப்பதில் இருந்து பின்வாங்கிய நீதிபதி...அரசியல் அழுத்தம் காரணமா?
இந்த மேல்முறையீடு வழக்கை விசாரணை செய்வதற்காக குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதி கோபியை நியமித்ததாக கூறப்படுகிறது.
![Rahul Gandhi : ராகுல் காந்தி அவதூறு வழக்கு...விசாரிப்பதில் இருந்து பின்வாங்கிய நீதிபதி...அரசியல் அழுத்தம் காரணமா? Gujarat High Court Judge Opts Out Of Hearing Rahul Gandhi Appeal know more details Rahul Gandhi : ராகுல் காந்தி அவதூறு வழக்கு...விசாரிப்பதில் இருந்து பின்வாங்கிய நீதிபதி...அரசியல் அழுத்தம் காரணமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/26/e2a31a3304c19aa384ee956980833e001682516414531224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கை சூரத் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து, சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி
மேல்முறையீடு செய்தார்.
ஜகா வாங்கிய நீதிபதி:
இந்த மேல்முறையீடு வழக்கை விசாரணை செய்வதற்காக குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதி கீதா கோபியை நியமித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதி கீதா கோபி தன்னை விடுவித்து கொண்டுள்ளார்.
மேலும், இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுவதற்காக தலைமை நீதிபதியிடம் ஒப்படைக்க நீதிமன்றப் பதிவுத்துறைக்கு நீதிபதி கோபி உத்தரவிட்டுள்ளார். எனவே, புதிய நீதிபதி கொண்ட அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றுவதற்கு இன்னும் 2 நாள்கள் ஆகலாம் என கூறப்படுகிறது.
அதன் பிறகே, வழக்கின் விசாரணை தொடங்கப்படும். இந்த வழக்கில் இருந்து நீதிபதி கீதா கோபி ஏன் விலகினார் என்பது தொடர் மர்மமாக இருந்து வருகிறது.
ராகுல் காந்தி அப்படி என்னதான் பேசினார்?
கடந்த 2019ஆம் ஆண்டு, கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரை மறைமுகமாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, "எப்படி, திருடர்கள் அனைவருக்கும் மோடி என பெயர் சூட்டுகிறார்கள்?" என கேள்வி எழுப்பியிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சு, அவதூறு கிளப்பும் வகையில் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. அதன் தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. அதில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது சூரத் நீதிமன்றம். இதன் காரணமாக, மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய 30 நாட்களுக்கு அவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தண்டனையை நிறுத்த வைக்கக் கோரி ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், ராகுல் காந்தியால் தற்போதைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது.
ராகுல் காந்திக்கு தொடர் பின்னடைவு:
அவதூறு வழக்கில் தொடர் பின்னடைவுகளை சந்தித்து வரும் ராகுல் காந்தி, அடுத்த சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கும் தள்ளப்பட்டுள்ளார். சூரத் நீதிமன்றத்தை தொடர்ந்து, பாட்னா நீதிமன்றத்திலும் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
மோடியின் பெயர் தொடர்பான அதே அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. தற்போது, அந்த சம்மனை ரத்து செய்யக் கோரி ராகுல் காந்தி பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரம் நீதிபதி சந்தீப் குமார் முன் குறிப்பிடப்பட்டது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட காரணத்தால், எம்பிக்களுக்கு வழங்கப்படும் அரசு பங்களாவில் இருந்து ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என மக்களவை செயலகம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அதன்படி, டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்து, அதை மக்களவை செயலகத்திடம் ராகுல் காந்தி சமீபத்தில் ஒப்படைத்தார். அரசு பங்களாவை காலி செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்துஸ்தானை சேர்ந்த மக்கள் 19 ஆண்டுகளாக இந்த வீட்டை எனக்கு கொடுத்தார்கள்.
அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். உண்மையைப் பேசுவதற்கான விலை இது. உண்மையை பேசுவதற்கு எந்த விலையையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்" என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)