ரூ. 21 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தப்பட்ட விவகாரம்: ஜூன் மாதமும் கடத்தப்பட்டதா?
கடந்த ஜூன் மாதத்தில் சுதாகரின் டிரேடிங் கம்பெனிக்கு ஆப்கானிஸ்தானிலிருந்து முகப்பவுடர் என்ற பெயரில் பார்சல்கள் வந்ததாக கூறப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் ரூ. 21 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருட்கள் சிக்கியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜூன் மாதத்திலும் கடத்தலில் ஈடுபட்டார்களா என்பது குறித்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 23ம் தேதி ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரான் வழியாக குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு 21,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 2,988 கிலோ போதைப்பொருட்கள் கடத்தப்பட்டுள்ளன. ‘முகத்திற்கு பூச பயன்படுத்தப்படும் பவுடர்’ எனும் பெயரில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து போதைப்பொருள் பார்சலில் குறிப்பிடப்பட்டிரு முகவரிக்கு சென்று அங்கு வசித்து வந்த துர்கா பூரண வைஷாலி என்பவரை கைது செய்தனர். சென்னை கொளப்பாக்கம் பகுதியில் வசித்து வந்த அவரது கணவர் சுதாகர் என்பவரையும் கைது செய்தனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக எட்டுக்கும் மேற்பட்டோரை இதுவரை கைது செய்துள்ளனர். மேலும், டெல்லியில் வசிக்கும் ஆப்கானிதானை சேர்ந்த சிலரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிரேடிங் கம்பெனியின் வைஷாலியின் தாயாரின் பெயரில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து
சுதாகர் மற்றும் அவரது மனைவி வைஷாலி ஆகியோரது சொந்த ஊரில் உள்ள அவர்களது உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சுதாகர் பல ஆண்டுகளாகவே சரக்கு மற்றும் போக்குவரத்து துறையில் பணியாற்றி வந்த நிலையில் அவருடன் நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விசாரணைகளின்போது கடந்த ஜூன் மாதத்திலும் சுதாகரின் டிரேடிங் கம்பெனிக்கு ஆப்கானிஸ்தானிலிருந்து முகப்பவுடர் என்ற பெயரில் பார்சல்கள் வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பார்சல்களிலும் ஹெராயின் மறைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டதா என்பது குறித்து தற்போது வருவாய் புலனாய்வுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறையில் அடைக்கப்பட்ட சுதாகர், வைஷாலி ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தான் உலகின் மிகப்பெரிய ஹெராயின் உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. மேலும் உலக நாடுகளுக்கு 80 முதல் 90 சதவீதம் அங்கிருந்துதான் சப்ளை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அங்கு தாலிபான்கள் நாட்டை கைப்பற்றிய பிறகு, ஹெராயின் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்படும் என அதன் தலைவர் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போதும் சப்ளை தொடர்வது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. வருவாய்ப் புலனாய்வுத்துறையிடமிருந்து கிடைத்த பல்வேறு தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்த அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை அதானி குழுமம் நிர்வகித்து வருவதால் போதைப்பொருள் கடத்தலில் அதானி குழுமத்திற்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பியிருந்தனர். இதனைத் தொடர்ந்து அதானி குழுமம் வெளியிட்ட அறிக்கையில் எங்களுக்கும் இதற்கும் எந்த தொடர்புமே இல்லை என தெரிவித்தது குறிப்பிடதக்கது.