Jignesh Mevani : பொது மக்களிடமே நிதி திரட்டி போட்டியிட்டு, மீண்டும் வென்ற ஜிக்னேஷ் மேவானி...பாஜக சுனாமி எதிர்நீச்சல் செய்து வெற்றி..!
மாநிலத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜிக்னேஷ், வட்கம் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்றிபெற்றுள்ளார்.
நடந்து முடிந்துள்ள குஜராத் தேர்தலில் காங்கிரஸ் படுமோசமான தோல்வியை சந்தித்துள்ளது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 16 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. இதுவரை நடைபெற்ற தேர்தலில் இந்த மாதிரியான மோசமான தோல்வியை காங்கிரஸ் சந்தித்ததே இல்லை.
கடந்த 1985ஆம் ஆண்டுக்கு பிறகே, காங்கிரஸ் கட்சியால் அங்கு ஆட்சி அமைக்கவே முடியவில்லை. இருந்தபோதிலும், இந்த முறை காங்கிரஸ் சற்று போட்டி அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்திய ஒற்றுமை பயணம் நடந்துவருவதால் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அம்மாநிலத்தின் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தவே இல்லை எனக் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
அதற்கு ஏற்றார் போல, இன்றைய முடிவுகள் அமைந்துள்ளன. 157 தொகுதிகளில் முன்னிலை வகித்த வருவதால், சாதனை வெற்றியை நோக்கி உள்ளது பாஜக.
இந்த தேர்தலை பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த ஒரே பிளஸ் பாயிண்ட் அக்கட்சியின் செயல் தலைவரான ஜிக்னேஷ் மேவானியின் வெற்றி.
மாநிலத்தின் பிரபலமான தலைவரான அவர், வட்கம் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்றிபெற்றுள்ளார். கடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு அவர் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றிருந்தார்.
தலித் உரிமைகளுக்காக போராடி வரும் தேசிய தலித் உரிமைகள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராக அவர் உள்ளார். அவர் போட்டியிட்ட வட்கம் தொகுதி, ரிசர்வ் தொகுதியாகும். ஒப்பிட்டளவில், அந்த தொகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கின்றனர்.
வட்கம் தொகுதியில் சுமார் 90,000 முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். மொத்தமுள்ள 2.94 லட்சம் வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கு சிறுபான்மை சமூகத்தினரே ஆவர். சுமார் 44,000 தலித் வாக்காளர்களும், 15,000 ராஜபுத்திரர்களும் உள்ளனர். மீதமுள்ளவர்கள் பெரும்பாலும் இதற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர்.
போதிய நிதி உதவி இல்லாத காரணத்தால், பொது மக்களிடம் இருந்தே நிதி உதவி பெற்று தேர்தலில் களம் கண்டார் ஜிக்னேஷ். ஜிக்னேஷ் மேவானிக்கு பாஜக வேட்பாளர் கடும் போட்டி அளித்தார். தொடர் பின்னடைவை சந்தித்த போதிலும், மதியத்திற்கு பிறகு, அவர் முன்னிலை பெற தொடங்கினார். இறுதியில், 92,567 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூத்த அமைச்சர்கள், பாஜக மாநில முதலமைச்சர்கள் என ஒட்டுமொத்த பாஜக மேலிடமும் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. அதன் விளைவாக, பாஜக அசுர வெற்றியை பதிவு செய்துள்ளது. அதை எதிர்த்து, ஜிக்னேஷ் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.