Gujarat: மணல் ஏற்றி சென்ற லாரி.. திடீரென உடைந்து விழுந்த பாலம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்..!
அவ்வப்போது ஆங்காங்கே பழைய கட்டடங்கள், பாலங்கள் உள்ளிட்டவை மழை, புயல், கட்டடத்தின் உறுதியற்ற தன்மை ஆகியவற்றின் காரணமாக தாக்குப்பிடிக்க முடியாமல் சேதமடைந்து வருவது வழக்கம்.
குஜராத் மாநிலத்தில் உள்ள பழைய பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்த நிலையில் அதில் நின்றிருந்த வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்து சேதமடைந்தது.
உலகளவில் அவ்வப்போது ஆங்காங்கே பழைய கட்டடங்கள், பாலங்கள் உள்ளிட்டவை மழை, புயல், கட்டடத்தின் உறுதியற்ற தன்மை ஆகியவற்றின் காரணமாக தாக்குப்பிடிக்க முடியாமல் சேதமடைந்து வருவது வழக்கம். இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அரசு முறையான பராமரிப்பு தொடர்பான நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகவும் உள்ளது. இதனால் வீண் உயிர்பலி, பொருட்சேதம் உள்ளிட்டவற்றை தடுக்க முடியும் என்பதே அனைவரது நம்பிக்கையாகவும் உள்ளது.
இப்படியான நிலையில் நேற்று (செப்டம்பர் 24) மாலை குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் போகாவோ ஆற்றின் குறுக்கே செல்லும் பழைய பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தேசிய நெடுஞ்சாலையை அம்மாவட்டத்தில் வாத்வான் நகருக்கு அருகில் உள்ள சுரா தாலுகாவுடன் இணைக்கும் போகாவோ ஆற்றுப் பாலம் 40 ஆண்டுகள் பழமையானது. இதனால் பாலத்தின் உறுதியற்ற தன்மையால் இதில் கனரக வாகனங்கள் நுழைவதற்கு கடுமையான தடைகளை மாவட்ட நிர்வாகம் விதித்திருந்தது.
Gujarat: Bridge collapses in Surendranagar; 6 injured, 4 missing
— The Patriot (@sam32207) September 24, 2023
I know. "Nehru ki galti hain" pic.twitter.com/AxsIiwdkz7
அதையும் மீறி அவ்வபோது நேரம் மிச்சமாகிறது என பல கனரக வாகனங்கள் இதில் சென்று வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ஆற்றின் மேல் செல்லும் பாலம் என்பதால் பொதுமக்களும் செல்ஃபி எடுக்க, நடைபயிற்சி மேற்கொள்ள என அதனைப் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் 40 டன் எடைக் கொண்ட மணல் ஏற்றி வந்த டம்பர் லாரி இந்த வழியாக செல்ல முயன்றது. ஆனால் எதிர்பாராதவிதமாக ஆற்றுப்பாலத்தின் நடுப்பகுதி இடிந்து விழுந்தது.
இதில் லாரியுடன் அந்த பாலத்தை கடக்க முயன்ற 2 மோட்டார் சைக்கிள் ஆகியவை ஆற்றுக்குள் விழுந்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் அரசு அதிகாரிகள் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் விபத்து குறித்து பேசிய சுரேந்திரநகர் மாவட்ட ஆட்சியர் கே.சி.சம்பத், “ நான்கு தசாப்தங்களின் நினைவுச்சின்னமாக இருக்கும் இந்த பாலம் மாநில சாலை மற்றும் கட்டிடங்கள் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. பாலத்தின் உறுதியற்ற தன்மை காரணமாக புதிய கட்டிடம் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அப்படியான சமயத்தில் பாலத்தில் கனரக வாகன போக்குவரத்தைத் தடுக்க எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனையும் மீறி லாரி சென்றுள்ளதாக தெரிவித்தார்.
இந்த பால விபத்து கடந்த ஆண்டு அக்டோபர் 30 அன்று குஜராத்தின் மோர்பியில் மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழமையான தொங்கு பாலம் இடிந்து விழுந்ததை நினைவுப்படுத்துவதாக பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த விபத்தில் 141 பேர் பலியான நிலையில் பாலம் புதிதாக புனரமைக்கப்பட்ட நிலையில் இடிந்து விழுந்தது ஒட்டுமொத்த இந்திய மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.