ஒரே ராக்கெட்டில் 36 செயற்கைக்கோள்கள்.. இன்றிரவு கவுண்ட் டவுன் தொடங்கும் இஸ்ரோ..
LVM 3: இஸ்ரோ ஒரே ராக்கெட்டில் 36 செயற்கைக்கோள்களை வரும் 23-ஆம் தேதி விண்ணில் ஏவுகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், ஒன்வெப் திட்டத்தின் கீழ் (OneWeb) ஜி.எஸ்.எல். வி. மார்க் 3 (Geosynchronous Satellite Launch Vehicle Mark III) ராக்கெட் மூலம் 36 செயற்கைக்கோள்களை வரும் 23-ஆம் தேதி விண்ணில் ஏவ உள்ளது. உலகளாவிய சந்தையில் வணிக ரீதியிலாக விண்ணில் ஏவப்படும் முயற்சியை இந்தியா முதன்முதலாக செயல்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரோ (ISRO) வின் பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NewSpace India Limited) உடன் இணைந்து இங்கிலாந்தின் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் நிறுவனத்தின் ‘ஒன்வெப்’ என்ற திட்டத்தின் மூலம் இந்தியா தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
எல்.வி.எம். - 3 ராக்கெட்:
இஸ்ரோ ஒரே ராக்கெட் மூலம் 36 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகிறது. ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 (எல்.வி.எம்.-3) ராக்கெட் என்று பெயரிடப்பட்டிருந்தது. தற்போது எல்.வி.எம். -3 (Launch Vehicle Mark 3 (LVM3) என்று மாற்றப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம். 3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான கவுன்டவுன் இந்திய நேரப்படி, நாளை (சனிக்கிழமை / 22.10.2022 - 00:07 மணி) இரவு 00:07 மணிக்கு தொடங்குகிறது. வரும் 23-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய நேரப்படி நள்ளிரவைக் கடந்த அதிகாலை 12.07 மணிக்கு எல்.வி.எம். -3 ராக்கெட் ஏவப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக ஒன்வெப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இஸ்ரோ தயாரித்த அதிக எடை கொண்ட எல்.வி.எம். 3- ராக்கெட் 640 டன் எடை கொண்டது. இந்தவகை ராக்கெட் திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எஞ்ஜின்களால் இயக்கப்படும்.
ஒன்வெப் (OneWeb) திட்டம்:
இங்கிலாந்தைச் சேர்ந்த ஒன்வெப் நிறுவனம் அரசாங்கங்கள், சர்வதேச அமைப்புகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான தகவல் தொடர்பை வழங்கும் உலகளாவிய கூட்டமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் பாரதி என்டர்பிரைசர்ஸ் (Bharti Enterprises) ஒன்வெப் நிறுவனத்தில் முதன்மையான பங்குதாரராகவும் முதலீட்டாளராகவும் இருக்கிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான், இஸ்ரோவும், என்.எஸ்.ஐ. எல். (NSIL) நிறுவனமும் இணைந்து புவியின் தாழ்வான வட்டப்பாதையில் செயற்கைக்கோளை நிலை நிறுத்த திட்டமிட்டுள்ளன.
வணிக ரீதியில் ராக்கெட் ஏவுதலுக்கான உலகளாவிய சந்தையில் இஸ்ரோ தன் பயணத்தை தொடங்கும் வரலாற்று சிறப்புமிக்க முயற்சியாக இது இருக்கும்.
இதன் மூலம் உலகளாவிய இணைய சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 'ஒன்வெப்' நிறுவனம் வைத்த இலக்கான 648 செயற்கைக் கோள்களில், தற்போது அனுப்பப்பட உள்ள 36 செயற்கைக் கோள்களையும் சேர்த்து 462 ஆகிறது. இது ஒன்வெப் நிறுவனம் 14-வது முறையாக செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது.
புவியின் வட்டப்பாதையில் 12 ஆர்பிட்களில் (ஒவ்வொரு ஆர்பிட்டிலும் 49 செயற்கைக்கோள்கள்) 648 செயற்கைக்கோள்கள் நிறுத்திவைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட்டில் இரண்டு சாலிட் ஸ்ட்ராப் மோட்டர்கள், ஒரு லிக்விட் பூஸ்டர் உள்ளன. இந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் 4 டன் செயற்கைக்கோள்களை தாங்கும் திறனுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
எல்.வி.எம். - 3 என்ற பெயர் மாற்றம் எதற்கு?
ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 என்ற பெயரில் இருந்து எல்.வி.எம். 3 என்ற மாற்றத்திற்கு இஸ்ரோ காரணம் தெரிவித்துள்ளது. இந்த தொலைத்தொடர்பு செயற்கைக்கொள்கள் புவியின் ஜியோசின்க்ரோனஸ் ஆர்பிடில் (geosynchronous orbit) நிலைநிறுத்தப்படாது.
ஒன்வெப் செயற்கைக்கோள்கள் 1,200 கிலோமீட்டர் உயரத்தில் புவியின் தாழ்வான வட்டப்பாதையில் (LEO- Low Earth Orbit) இயங்கும். இதனை அடையாளமிட ஏதுவாக பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரலையில் ஒளிப்பரப்பு:
எல்.வி. எம். - 3 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நிகழ்வு ஒன்வெப் வலைதளம், சமூக ஊடகங்களான டிவிட்டர், லிங்க்டின் உள்ளிட்டவற்றில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Launch time confirmed 🚀#OneWebLaunch14 with @ISRO is set to take place this weekend.
— OneWeb (@OneWeb) October 18, 2022
Lift-off is scheduled for 00:07 (IST), 23 October. That's 19:37 (BST) and 14:37 (ET), 22 October.
You can follow the launch live on our website, or across our YouTube and LinkedIn channels. pic.twitter.com/1ReHwKaxVj
விண்வெளி துறையில் இந்தியாவின் புதிய சாதனையாகும்.