Crime: 4ம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் - பள்ளிக்கு சென்றபோது அவலம்
மத்தியப்பிரதேசத்தில் 4ஆம் வகுப்பு பயிலும் சிறுமியை அந்தப் பள்ளியில் ஆசிரியவர் ஒருவரே பாலியல் பலாத்காரம் செய்தது அம்பலமானதால் அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மத்தியப்பிரதேசத்தில் 4ம் வகுப்பு பயிலும் சிறுமியை அந்தப் பள்ளியில் ஆசிரியவர் ஒருவரே பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. மத்தியப்பிரதேசத்தில் உள்ளது ரேவா மாவட்டம். இங்கு சோஹாகி காவல் எல்லைக்கு உட்பட்ட ஒரு அரசுப் பள்ளியில் தான் இந்தக் கொடூரம் நடந்துள்ளது.
பள்ளிக்கு சென்ற சிறுமி:
கடந்த சனிக்கிழமையன்று அந்தச் சிறுமி வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றார். அப்போது அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் சிறுமியை மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்தச் சிறுமி மாலை வீடு திரும்பியவுடன் தனக்கு நேர்ந்த கொடூரத்தை பெற்றோர்களிடம் விவரித்துள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், உறவினர் போலீஸில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து அந்த ஆசிரியர் மீது போக்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபரிடம் உரிய விசாரணை நடப்பதாக போலீஸ் துணை எஸ்பி விவேக் குமார் லால் தெரிவித்துள்ளார். அண்மையில் தான் மத்தியப்பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த குற்றத்துக்காக 30 வயது ஆசாமி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
போக்சோ சட்டம் சிறப்பம்சங்கள்:
18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்,வன்முறை, பாலியல் துன்புறுத்தல், சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது.
இச்சட்டத்தில் கீழ் 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடியவேண்டும். இசட்டத்தில் குற்றம் புரிந்த குற்றவாளிகளுக்கு சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங்காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம், சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது.
அவசர சிகிச்சை:
குழந்தை எதை எப்படி சொல்லுகிறதோ, அதை அப்படியே அந்த வார்த்தைகளில் பதிவுசெய்ய வேண்டும். மாற்றுத்திறனாளி என்றால், குழந்தை பேசுவதைப் புரிந்து கொண்டு எடுத்துச் சொல்ல சைகை மொழி பேசுபவர் அல்லது குழந்தையின் பெற்றோர், உறவினரின் உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மருத்துவப் பரிசோதனை, பெற்றோர்,உற்றோரின் முன்னிலையில் செய்யப் பட வேண்டும். பெண் குழந்தை என்றால், பெண் மருத்துவர் செய்ய வேண்டும். அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க நேர்கிறபோது, மருத்துவர்கள் காவல் துறை அல்லது நீதி துறையின் உத்தரவைக் கோரக் கூடாது.