Government bans drugs: மக்களே உஷார்..! ஆபத்தான 14 மருந்துகளுக்கு தடை - மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
பொதுமக்களின் சிகிச்சைக்கு பயன்படுத்த தகுதியற்ற 14 மருந்துகளுக்கு தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுமக்களின் சிகிசைக்கு பயன்படுத்த தகுதியற்ற 14 மருந்துகளுக்கு தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நிபுணர் குழுவின் பரிந்துரைகளை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நடவடிக்கை:
நிம்சுலைடு மற்றும் பாராசிட்டமால் டிஸ்பர்சிபிள் மாத்திரைகள் மற்றும் குளோபெனிரமைன் மாலேட் மற்றும் கோடீன் சிரப் உள்ளிட்ட 14 நிலையான டோஸ் கலவை (fixed-dose combination) மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த பட்டியலில், பொதுவான நோய்த்தொற்றுகள், இருமல் மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளும் இடம்பெற்றுள்ளன.
தடை செய்யப்பட்ட மருந்துகளின் விவரங்கள்:
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “நிம்சுலைடு + பாராசிட்டமால் சிதறக்கூடிய மாத்திரைகள், குளோர்பெனிரமைன் மாலேட் + கோடீன் சிரப், ஃபோல்கோடின் + ப்ரோமெதாசின், அமோக்ஸிசிலின் + ப்ரோம்ஹெக்சின் மற்றும் ப்ரோம்ஹெக்சின் + டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் + அம்மோனியம் + குளோரைடு + மென்தால், பாராசிட்டமால் + ப்ரொமெக்ஸின் + ஃபெனிலெஃப்ரின், ப்ரோமொலின் + குளோர்பெனிரமைன் + குய்பெனெசின் மற்றும் சல்பூட்டமால் + ப்ரோம்ஹெக்சின். நிபுணர் குழுவின் பரிந்துரைகளை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. FDC எனப்படும் இந்த நிலையான டோஸ் கலவையை சிகிச்சைக்குக்கு பயன்படுத்துவதில் எந்தவித நியாயமும் இல்லை, இது மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும் நிபுணர் குழு கூறியதை ஏற்று” இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அரசு தரப்பு விளக்கம்:
நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று பெரிய பொது நலன் கருதி, 1940 இன் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் 26 A பிரிவின் கீழ் இந்த FDC இன் உற்பத்தி, விற்பனை அல்லது விநியோகத்தை தடை செய்வது அவசியம்.
"மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட மருந்துகளை நோயாளிகளின் எந்தவொரு பயன்பாட்டிற்கும் அல்லது கட்டுப்பாட்டிற்கும் அனுமதி அளிப்பது நியாயமானதல்ல. அதேசமயம், நிபுணர் குழு மற்றும் மருந்துகளின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய அரசு திருப்தி அடைந்துள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகம் ஆகியவற்றை தடைசெய்யும் வகையில் கட்டுப்படுத்துவது அவசியமானது மற்றும் பயனுள்ளது" என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
FDC மருந்துகள் ஒரு நிலையான விகிதத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செயலில் உள்ள மருந்துப் பொருட்களின் (APIகள்) கலவையைக் கொண்டவை. 2016 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, அறிவியல் தரவு இல்லாமல் நோயாளிகளுக்கு விற்கப்படுவதாகக் கூறியதைத் தொடர்ந்து, 344 மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்திற்கு தடை விதித்து அரசாங்கம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.