Crime: விமானத்தின் டாய்லெட்டில் பதுக்கப்பட்ட 2 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் - நடந்தது என்ன..?
இந்திரா காந்தி சர்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்தில் உள்ள சர்வதேச விமானத்தின் கழிவறையில் இருந்து சுமார் 2 கோடி மதிப்புள்ள நான்கு தங்கக் கட்டிகளை சுங்க அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர்.
சமீப காலமாக, விமான நிலையங்கள் மூலம் தங்கம் கடத்தப்படுவது அதிகரித்து வந்துள்ளது. தங்கம் மட்டும் இன்றி, போதை பொருள்கள், அரிய வகை விலங்குகள், மதிப்புமிக்க ஆபரணங்கள் ஆகியவை கடத்தப்பட்ட சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் கடத்தல் சம்பவங்கள்:
டெல்லி விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திரா காந்தி சர்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்தில் உள்ள சர்வதேச விமானத்தின் கழிவறையில் இருந்து சுமார் 2 கோடி மதிப்புள்ள நான்கு தங்கக் கட்டிகளை சுங்க அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர்.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், உள்நாட்டு பயணத்தை முடித்துவிட்டு விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்திற்கு வந்திறங்கிய விமானத்தை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
கழிவறையில் தங்க கட்டிகள்:
சோதனையின்போது, கழிவறையில் பொருத்தப்பட்டிருந்த தொட்டியின் கீழே இருந்த சாம்பல் நிற பையை சுங்க அதிகாரிகள் மீட்டனர். சாம்பல் நிற பையில் 3969 கிராம் எடையுள்ள நான்கு செவ்வக தங்கக் கட்டிகள் இருந்தன. செவ்வக வடிவ தங்கக் கட்டிகளின் விலை 1 கோடியே 95 லட்சத்து 72 ஆயிரத்து 400 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சுங்கச் சட்டம், 1962, பிரிவு 110இன் கீழ் மீட்கப்பட்ட தங்கம் கைப்பற்றப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட, வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு போதைப் பொருள் கடத்தல் சம்பவம் டெல்லியில் அரங்கேறி வருகிறது. டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு இரண்டு ஆப்கானிஸ்தான் பிரஜைகளை இது தொடர்பாக கைது செய்திருந்தது.
1200 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள்:
1200 கோடி ரூபாய் மதிப்புள்ள 312.5 கிலோ மெத்தாம்பேட்டமைன் மற்றும் 10 கிலோ தூய்மையான ஹெராயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள், டெல்லியில் உள்ள கலிந்தி குஞ்ச் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள மீத்தாபூர் சாலையில் கைது செய்யப்பட்டனர்.
வெளிநாடுகளில் இருந்து கொண்டு, இயங்கி வரும் அடையாளம் காணப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரின் பெரும் சரக்கு டெல்லிக்கு கடத்தப்படுவதாக டெல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் முஸ்தபா ஸ்டானிக்சா (வயது 23) மற்றும் ரஹிமுல்லா ரஹீம் (வயது 44) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
மகாராஷ்டிரா சம்பவம்:
அதேபோல, மகாராஷ்டிரா பால்கர் மாவட்டத்தின் நலசோபராவில் உள்ள போதைப்பொருள் தயாரிப்பு ஆலையில் மும்பை போலீசார் நடத்திய சோதனையில் 1,400 கோடி ரூபாய் மதிப்பிலான 700 கிலோகிராம் மெபெட்ரான் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, கரிம வேதியியல் முதுகலை பட்டதாரி உட்பட 5 பேரை கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிக்க: பெண்களுக்கு என்ன உரிமையெல்லாம் இருக்கிறது? இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்வது என்ன? தெரிஞ்சுக்கோங்க!