திருப்பதி ஏழுமலையானுக்கு வரும் தங்கம், ரொக்கம் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டெபாசிட்... தேவஸ்தான சீஇஓ
திருப்பதி ஏழுமலையானுக்கு வரும் காணிக்கை தங்கம், மாநில அரசிடம் அடகு வைக்கப்படுவதாக பகிரப்படும் தகவல்கள் ஏற்புடையதல்ல என திருப்பதி தேவஸ்தான சிஇஓ தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பணம், தங்கம் ஆகியவற்றை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் டெபாசிட் செய்து வருகிறது.
ஆனால், திருமலை - திருப்பதி தேவஸ்தானம் டெபாசிட் என்ற பெயரில் ஆந்திர மாநில அரசிடம் தங்கத்தை அடகு வைப்பதாக முன்னதாகத் தகவல்கள் பரவின.
இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, தேவஸ்தானம் பற்றி சிலர் இவ்வாறு தவறான செய்தியைப் பரப்புவது ஏற்புடையது அல்ல எனக் கூறியுள்ளார்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தங்கம் மொத்தம் 10,258.37 கிலோ கிராம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஏழுமலையானின் ரொக்க டெபாசிட் வெகுவாக அதிகரித்துள்ளது. 2019ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி 13,025 கோடி ரூபாய் ரொக்கப்பணம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. தற்போது 15,938 கோடி ரூபாய் ரொக்கம் டெபாசிட் தொகை உள்ளது.
2019ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி தங்கம் கையிருப்பு 7,339.74 கிலோ கிராம் இருந்தது. தற்போது அது 10,258.37 கிலோ கிராமாக அதிகரித்துள்ளது.
ஏழுமலையானின் தங்க நகைகள், ரொக்கம் ஆகியவை அதிக வட்டி தரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தான் டெபாசிட் செய்யப்பட்டு வருகின்றன. எந்தச் சூழலிலும் சாமியின் பணம் மற்றும் தங்க நகைகளை தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்ய மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.
திருமலை தேவஸ்தானத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சொத்து மதிப்புகள் பற்றி திருப்பதி தேவஸ்தானம் கடந்த செப்டெம்பர் மாதம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன்படி, திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 85,705 கோடி ரூபாய் மதிப்புள்ள 960 சொத்துக்கள் உள்ளது.
திருமலை தேவஸ்தான அரங்காவலர் குழு கூட்டத்துக்கு பின் தலைவர் சுப்பாரெட்டி பேட்டியளித்துள்ளார். திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்து வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் இது குறித்து தகவல் வெளியிடப்பட்டது.
”இவ்வளவு சொத்துக்கள் கோயிலுக்கு சேர திருப்பதி பாலாஜி மீது பக்தர்களுக்கு உள்ள நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையின் அடிப்படையில், பலரும் பணமாக, நகையாக, பொருளாக, அசையும் மற்றும் அசையா சொத்துக்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். மதம் கடந்தும் இந்த நம்பிக்கையின் வெளிப்பாடு இருப்பதையும் நாம் காண முடிகிறது. சமீபத்தில் கூட சென்னையைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதி, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 1,02,00,000 ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை அப்துல் கனி மற்றும் நுபினா பானு ஆகியோர் நன்கொடை காசோலையை வழங்கினர். சென்னையைச் சேர்ந்த தம்பதியினர் கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகுலா மண்டபத்தில் TTD செயல் அலுவலர் தர்மா ரெட்டியை சந்தித்து காசோலையை வழங்கியுள்ளனர்.
மொத்தத் தொகையில், 15 லட்சம் ரூபாய் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, இந்த அறக்கட்டளை தினமும் கோயிஉலுக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு இலவச உணவு வழங்குகிறது. மீதமுள்ள 87 லட்ச ரூபாயில் ஸ்ரீ பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சமையலறையில் புதிய மரச்சாமான்கள் மற்றும் பொருட்கள் வாங்கவும் வழங்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.