NEET OBC Reservation: மருத்துவப் படிப்புகளில் ஓபிசி இட ஒதுக்கீடு - பிரதமர் முக்கிய அறிவுறுத்தல்..!
உச்சநீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்த மத்திய அரசு, கொள்கை முடிவை எடுக்கும் வரை மருத்துவ படிப்புகளில் ஓபிசி இடஒதுக்கீட்டை செயல்படுத்த முடியாது என்று தெரிவித்தது
அகில இந்திய தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட மருத்துவக் கல்வி இடங்களில், ஓபிசி இடஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்தும் பணிகளில் கூடுதல் அக்கறை செலுத்திட வேண்டும் என பிரதமர் மோடி மத்திய கல்வித்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு மாணவர் சேர்க்கைக்கான மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தும் பணியை சிபிஎஸ்இ கடந்த 1987ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே, 2017ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட அகில இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956 மற்றும் பல் மருத்துவர் சட்டம் 1948ன்படி நாடுமுழுவதும் உள்ள 100 சதவீத மருத்துவ/பல் மருத்துவ (பட்டப்படிப்பு) இருக்கைகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது.
தற்போதைய நடைமுறையின் கீழ், இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளின் 15% இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு ஒதுக்கப்படுகிறது. முதுநிலைப் படிப்புகளுக்கு இந்த எண்ணிக்கை 50% ஆகும். இந்த தொகுப்பு இடங்களில், பட்டியலின/பழங்குடியின வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தும் போது, அதில் பிற பிற்படுத்தப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மத்திய தொகுப்புக்கு மாநிலம் கொடுத்த 15% இளநிலை மற்றும் 50% முதுநிலை இடங்களில், ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு 50% (69% தமிழ்நாடு அளவு கோள்,மத்திய அரசு ஒபிசி பிரிவினருக்கு 27% இடஒதுகீடு வழங்குகிறது) இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.
தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக இயக்கங்களும் நீதிமன்றத்தை அணுகின. 2020ம் ஆண்டு ஜூலை மாதம், இதுதொடர்பான வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ”பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்டரீதியாக எந்தத் தடையும் இல்லை; மாநிலத்தில் அளிக்கப்படும் 50 சதவீத இட ஒதுக்கீட்டை அவர்களுக்கு வழங்கலாம் என மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்; மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமின்றி பிற மருத்துவக் கல்லூரிகளிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்றால் உச்ச நீதிமன்றம்தான் ஆணையிட வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ) முன்வைத்த வாதம் ஏற்புடையதல்ல” என்று தெரிவித்தது. அதுமட்டுமின்றி அடுத்த கல்வி ஆண்டில் இந்த இட ஒதுக்கீட்டை வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்து முடிவு செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அமைக்க வேண்டும். அதில், தமிழக அதிகாரிகளும் இடம்பெற வேண்டும்" என்று கூறியது.
இருப்பினும், நடப்பாண்டு முதலே இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதில், பதில்மனு தாக்கல் செய்த மத்திய அரசு, கொள்கை முடிவை எடுக்கும் வரை மருத்துவ படிப்புகளில் ஓபிசி இடஒதுக்கீட்டை செயல்படுத்த முடியாது என்று தெரிவித்தது. இதனால் 50% இடஒதுக்கீடு மட்டுமல்லாமல் 27% இடஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த திங்களன்று, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டம் நடைபெற்றது. கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், மருத்துவப் படிப்புகளில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் ஒபிசி இடஒதுக்கீடு முறையை சரிசெய்ய அக்கறை செலுத்திட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியாவிலயே இடஒதுக்கீட்டுக்கு முன்னோடி மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகள் மேற்கொண்ட தொடர் சட்டப் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாகவே இது கருதப்படுகிறது.
மேலும் வாசிக்க: