Shylaja Teacher : யார் இந்த ஷைலஜா டீச்சர்?
கடந்தாண்டு கொரோனா தொற்றின் முதல் அலை தொடங்கியபோது ஒட்டுமொத்த தேசமே, கண்ணுக்கே தெரியாத எதிரியுடன் போராடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. குளிர் பிரதேச நாடுகளில்தான் கொரோனா வைரசின் பாதிப்பு அதிகளவில் இருந்ததால், இந்தியாவிலும் குளிர்ச்சியான நகரங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று கணிப்புகள் வெளியாகியது. அந்த தருணத்தில் புயல், கனமழை என்று தொடர் இன்னல்களுக்கு ஆளாகி இருந்த கடவுளின் தேசமான கேரளா கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்று எச்சரிக்கப்பட்டது. ஆனால், கொரோனா வைரசிடம் இருந்து ஒற்றை அரணாக இருந்து கேரளாவை காப்பாற்றியவர் ஷைலஜா டீச்சர். கொரோனா தொற்றின் முதல் அலை கேரளாவை தாக்கியபோது, அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர்தான் ஷைலஜா.
தற்போது 64 வயதாகும் ஷைலஜா, 1956ம் ஆண்டு குந்தன் மற்றும் சாந்தா தம்பதியினருக்கு நவம்பர் 20-ஆம் தேதி கன்னூர் மாவட்டத்தில் உள்ள குதுபரம்பாவில் பிறந்தவர். அந்த மாநிலத்தில் உள்ள மட்டனூரில் உள்ள என்.எஸ்.எஸ். கல்லூரியில் பட்டப்படிப்பையும், விஸ்வேஸ்வரய்யா கல்லூரியில் பி.எட். படிப்பையும் நிறைவு செய்த ஷைலஜா, தனது வாழ்க்கையை அந்த மாநிலத்தில் உள்ள சிவபுரத்தில் ஆசிரியையாக தொடங்கினார்.
1981-ஆம் ஆண்டு பாஸ்கரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஷைலஜாவிற்கு, லசித் மற்றும் சோபித் என்று இரு மகன்கள் உள்ளனர். அரசியலிலும், பொது சேவையிலும் ஆர்வத்துடன் காணப்பட்ட ஷைலஜா, சுமார் ஏழு ஆண்டுகள் ஆசிரிய சேவைக்கு பின்னர் தனது பணியை ராஜினாமா செய்து முழு நேர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட அவர், தனது அயராத உழைப்பினால் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இடம் பெற்றார். இதையடுத்து, ஜனாதிபத்திய மகிளா கழகத்தின் மாநில தலைவராகவும் பொறுப்பு வகித்தார். அவரது அர்ப்பணிப்பு உணர்வை கண்ட கட்சித் தலைமை, அவருக்கு 1996-ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள குதுபரம்பா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தது. அந்த தேர்தலில் வெற்றி பெற்று முதன் முறையாக சட்டசபை உறுப்பினராக சட்டசபைக்கு சென்றார். பின்னர் 2006-ஆம் ஆண்டு பெராவூர் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டார். சட்டமன்ற உறுப்பினராக தொகுதியில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்தி அதை தீர்ப்பதை தலையாய பணியாக கொண்டிருந்தார். 2016-ஆம் ஆண்டு குத்துபரம்பா தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஷைலஜா டீச்சருக்கு, பினராயி விஜயன் சுகாதாரத்துறை மற்றும் சமூகநலத்துறை என்ற இரு பெரும் முக்கிய துறைகளை அவர் வசம் நம்பிக்கையுடன் ஒப்படைத்தார்.
அவரது நம்பிக்கைக்கு மிகவும் சரியானவர் இவர் மட்டுமே எனும் அளவிற்கு ஷைலஜா டீச்சரின் செயல்பாடுகள் பாராட்டுத்தக்கும் வகையில் அமைந்தது. இந்த சூழலில், கடந்தாண்டு பிற மாநிலங்கள் கொரோனா வைரசை எப்படி எதிர்கொள்வது என்று தொடக்க கட்டத்தில் தடுமாறிக்கொண்டிருந்த நேரத்தில், பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார் ஷைலஜா.
தொற்று பரவுகிறது என்பதை அறிந்தவுடன் முதலில், சீனாவின் ஊஹானில் இருந்து கேரளா வருபவர்கள் யார்? யார்? என்று கண்காணிக்க குழு ஒன்றை உருவாக்கினார். கேரளாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் தனது கண்காணிப்பின்கீழ் கொண்டு வந்தார். இதற்காக ஒரு சிறப்பு குழுவையும் உருவாக்கினார். சீனாவில் கொரோனா வைரஸ் உக்கிரம் அடைந்த தருணத்தில், வூஹானில் இருந்து ஜனவரி மாதம் 30-ஆம் தேதி கேரளா வந்த மாணவி ஒருவரை உடனடியாக விமான நிலையத்தில் இருந்து திருச்சூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டார். அந்த பெண்ணை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்த அந்த பெண்ணின் பெற்றோர்களையும் தனிமைப்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து, கொரோனா தொற்றுடன் ஆலப்புழா, காசர்கோடு, திருச்சூர் வந்த மாணவிகளும் உடனடியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு குணப்படுத்தப்பட்டனர்.
பெரும்பாலான மாநிலங்களில் அமைச்சர்கள் பலரும் வெளியே வராத சூழலில், கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்த அனைத்து மருத்துவமனைகளுக்கும் தானே நேரில் சென்று கொரோனா நோயாளிகளுக்கு ஆறுதல் கூறினார். மருத்துவமனையில் நோயாளிகள் மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடாது என்பதற்காக, அரசு மருத்துவமனைகளில் வைஃபை உள்ளிட்ட வசதிகளுக்கும் ஏற்பாடு செய்தார்.
நிபா வைரசை திறன்பட எதிர்கொண்ட அனுபவமே தனக்கு கொரோனா தொற்றை எதிர்கொள்ளவும் கை கொடுத்ததாக அவரே கூறியிருந்தார். கொரோனா தொற்று எதிர்ப்பு பணிக்காக ஷைலஜா டீச்சர் எப்போதும் தன்னுடன் 20 பேர் கொண்ட குழுவை உடன் வைத்திருந்தார். இந்த குழு கொரோனா தடுப்பு பணிகளின் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்த அதே தருணத்தில், எதிர்கால நலன் கருதி வைரஸ் தாக்கத்தை எளிதில் கையாள்வதற்காக கேரளாவில் வைராலஜி மையம் ஒன்றையும் திறந்து வைத்தார்.
பசுவின் கோமியத்தை அருந்துங்கள், மாட்டு சாணத்தை உடலில் பூசுங்கள், விளக்கு ஏற்றுங்கள் என்ற மூட நம்பிக்கைகள் மக்களை திசைதிருப்பி கொண்டிருந்த சூழலில், மனிதநேயம், பரிசோதனை, மருத்துவ சீர்திருத்தம் மட்டுமே கொரோனாவை எதிர்கொள்ள தேவைப்படுகிறது. மூடநம்பிக்கை, உணர்ச்சிவசப்படுதல் ஆகியவை கொரோனாவை எதிர்க்க கை கொடுக்காது என்று அறிவார்ந்த கருத்தை முன்னெடுத்து வைத்து மக்களை சரியான பாதையில் வழிநடத்தினார். இவ்வாறு மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்த ஷைலஜா டீச்சர்தான் இன்று இந்திய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளார். அதற்கு காரணம், கேரளாவில் மீண்டும் ஆட்சியை பிடித்து முதல்வராக பொறுப்பு ஏற்க உள்ள பினராயி விஜயனின் அமைச்சரவையில் அவருக்கு இடமில்லை என்பதுதான்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்ற அதே நாளில் கேரளாவிற்கும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், மட்டனூர் தொகுதியில் போட்டியிட்ட ஷைலஜா டீச்சர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை காட்டிலும் 58 ஆயிரத்து 872 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனால், அவரே மீண்டும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தருணத்தில், 21 பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டியலில் ஷைலஜாவின் பெயர் இடம்பெறவில்லை. இது கேரள மக்கள் மட்டுமின்றி நாடு முழுவதுமே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது சிறப்பான செயல்பாடு காரணமாகவே, கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 லட்சம் நபர்களில் 11 லட்சம் குணமடைந்து வீடு திரும்பினர்.
நிபா வைரஸ், நிலச்சரிவு, புயல், கொரோனா வைரஸ் போன்று பல்வேறு இடர்களை அறிவார்ந்த செயல்பாடுகளுடன் எதிர்கொண்டு வெற்றி கொண்ட ஷைலஜா அமைச்சரவையில் இடம்பெறாதது அந்த மாநிலத்திற்கே மிகப்பெரிய இழப்பு என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் வெளியாகி வருகிறது. அவரையே மீண்டும் கேரள சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்றும் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால், நிச்சயமாக பினராயி விஜயன் ஷைலஜா டீச்சர் அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து மீண்டும் பரிசீலிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.