(Source: ECI/ABP News/ABP Majha)
Gautam Adani: பணக்காரர்கள் பட்டியல்! அம்பானியை தட்டித்தூக்கிய அதானி.. மின்சாரம் முதல் துறைமுகம் வரை.. எப்படி சாத்தியம்?
Third Richest Person in the World; மின்சாரத்திலிருந்து துறைமுகம் வரை பல்வேறு துறையில் வணிகம் செய்து வரும் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
மின்சாரத்திலிருந்து துறைமுகம் வரை பல்வேறு துறையில் வணிகம் செய்து வரும் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடத்திற்கு முன்னேறி உள்ளார். டாப் மூன்று இடங்களில் ஆசியர் ஒருவர் இடம்பெறுவது இதுவே முதல்முறை.
முகேஷ் அம்பானி மற்றும் ஜாக் மா ஆகியோர் பணக்காரர்கள் பட்டியலில் அடிக்கடி பெயரிடப்பட்டிருந்தாலும், அவர்கள் முதல் மூன்று இடத்தில் இடம்பெற்றதில்லை. LVMH Moet Hennessy நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் அதானி.
ப்ளூம்பெர்க் வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியலில், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க் மற்றும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் அதானி இடம்பெற்றுள்ளார். இந்த பட்டியலின்படி, அதானியின் நிகர மதிப்பு 137 பில்லியன் டாலர்கள் ஆகும்.
உள்நாட்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) தலைவர் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளியுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் தற்போது பட்டியலில் 11வது இடத்தில் உள்ளார். அவரின் நிகர மதிப்பு 91.9 பில்லியன் டாலர்களாகும். ஃபோர்ப்ஸ் 2022 பில்லியனர்களின் தரவரிசைப்படி, அதானி 141.4 பில்லியன் டாலர்கள் நிகர மதிப்புடன் நான்காவது இடத்திலும், அம்பானி 94 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் எட்டாவது இடத்திலும் உள்ளார்.
ஒரே ஆண்டில் அம்பானியை அதானி பின்னுக்கு தள்ளியது எப்படி?
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான அதானி, 2022ல் மட்டும் தனது சொத்தை 60 பில்லியன் டாலருக்கு மேல் அதிகரித்துள்ளார். மற்ற பணக்காரர்களை விட ஐந்து மடங்கு அதிகம். பிப்ரவரியில் அம்பானியை முந்திச் சென்று, ஏப்ரலில் செண்டிபில்லியனர் (நிகர சொத்து $100 பில்லியன் அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள்) ஆக உருவெடுத்தார். இதற்கிடையில், ஜூன் 24 அன்று அவரது 60ஆவது பிறந்தநாளில், அதானி சமூக சேவைக்காக 60,000 ரூபாய் நன்கொடை அளிப்பதாக உறுதியளித்தார்.
அதானி சமீபத்தில் வாங்கிய நிறுவனங்கள்
ஊடகம்
ஆகஸ்ட் 23 அன்று, அதானி குழுமத்தின் துணை நிறுவனமான ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க் லிமிடெட் (ஏஎம்என்எல்), விஸ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் (விசிபிஎல்) நிறுவனம் மூலம் என்டிடிவியை தொடங்கிய ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட் (ஆர்ஆர்பிஆர்) நிறுவனத்தின் 99.99% பங்குகளை வாங்குவதற்கான செயல்முறையைத் தொடங்கியதாக அறிவித்தது. NDTVயில் 26% பங்குகள் வரை பெறுவதற்கான திறந்த சலுகையில் ஈடுபட்டுள்ளது. இருப்பினும், என்டிடிவி தனது ஒப்புதல் கோரப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது.
சிமென்ட்
மே மாதத்தில், ஹொல்சிம் ஏஜியின் சிமென்ட் நிறுவனத்தை 10.5 பில்லியன் டாலருக்கு வாங்குவதாக அதானி குழுமம் அறிவித்தது. அதானியின் மிகப்பெரிய கையகப்படுத்தல் நடவடிக்கை இதுவாகும்.
மின்சாரம்
ஆகஸ்ட் 19 அன்று, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் அனல் மின் உற்பத்தியாளரான அதானி பவர், அனல் மின் நிலைய ஆபரேட்டரான டிபி பவரை ரூ.7,017 கோடி நிறுவன மதிப்புக்கு வாங்குவதாகக் அறிவிப்பு வெளியிட்டது.
துறைமுகம்
ஜூலை மத்தியில், இஸ்ரேல் தனது மத்திய தரைக்கடல் கடற்கரையில் உள்ள ஒரு முக்கிய வர்த்தக மையமான ஹைஃபா துறைமுகத்தை அதானி துறைமுகங்கள் மற்றும் உள்ளூர் இரசாயனங்கள் மற்றும் தளவாடக் குழுவான கடோட்டிற்கு 1.18 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்வதாக அறிவித்தது.
சாலை உள்கட்டமைப்பு
இந்த மாத தொடக்கத்தில், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள Macquarie Asia Infrastructure Fundஇன் இந்தியா சுங்க சாலைகளை ரூ.3,110 கோடிக்கு வாங்கும் என தகவல் வெளியிட்டுள்ளது.