Cryptocurrency : கிரிப்டோகரன்சிக்கு கட்டுப்பாடுகளா? ஜி20 அமைப்பு அதிரடி.. நிர்மலா சீதாராமன் தகவல்
க்ரிப்டோ சொத்துக்கள் பற்றிய கொள்கைக்கான உலகளாவிய உந்துதல் ஜி20 இந்திய தலைமையின் கீழ் வேகம் பெற்றது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டெல்லியில் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு இன்று தொடங்கியது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்பட 40 நாடுகளை சேர்ந்த உலக தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டனர்.
டெல்லி உச்சி மாநாட்டில் பல வரலாற்று நிகழ்வுகள் அரங்கேறின. முதலில், ஜி20 அமைப்பின் 21ஆவது உறுப்பினராக ஆப்பிரிக்க ஒன்றியம் சேர்க்கப்பட்டது. இதை தொடர்ந்து, பல்வேறு விவகாரங்களில் ஜி20 அமைப்பின் நிலைபாடுகளை அறிவிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தில் புவிசார் அரசியல் தொடர்பான புதிய பத்திகள் சேர்க்கப்பட்டுள்ளன. ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. உச்சி மாநாட்டின் இன்றைய அமர்வை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விளக்கி பேசினார்.
கிரிப்டோ கரன்சிக்கு கட்டுப்பாடுகளா?
கிரிப்டோ கரன்சி குறித்து பேசிய அவர், "நிதி ஸ்திரத்தன்மை வாரியத்தின் (FSB) அறிக்கை ஒழுங்குமுறையில் அதிக கவனம் செலுத்தியுள்ளது. கிரிப்டோ கரன்சியால் ஏற்படும் மேக்ரோ பொருளாதார தாக்கங்களை சர்வதேச நிதியம் (IMF) ஆய்வு செய்தது. எனவே, அவர்களின் கூட்டறிக்கையை ஜி20 உறுப்பினர்கள் விரிவாகப் ஆய்வு செய்வார்கள்
நிதி தொடர்பான விவகாரத்தில் எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசிக்க மாராகேஷ் நகரில் எங்கள் தலைமையின் கீழ் இன்னும் ஒரு கூட்டம் நடைபெற உள்ளது. அங்கு FSB மற்றும் IMF அறிக்கைகள் விவாதிக்கப்படும். எனவே, ஜி20 உறுப்பினர்கள், அதை எப்படி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள்
க்ரிப்டோ சொத்துக்கள் பற்றிய கொள்கைக்கான உலகளாவிய உந்துதல் ஜி20 இந்திய தலைமையின் கீழ் வேகம் பெற்றது. உலக அளவில் இதில் ஒருமித்த கருத்து வர தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் இந்திய தலைமை, சர்வதேச நிதியத்திற்கு ஆதரவளிக்கும். கிரிப்டோ சொத்துக்களுக்கான உலகளாவிய ஒருங்கிணைந்த அணுகுமுறைக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பின் வரையறைகளையும் நிதி ஸ்திரத்தன்மை வாரியம் அமைத்து வருகிறது.
ஜி20 அமைப்பு இந்திய தலைமையின் கீழ் சாதித்தது என்ன?
சர்வதேச நிதியம் மற்றும் நிதி ஸ்திரத்தன்மை வாரியத்தின் ஆதரவுடன் ஜி20 அமைப்பின் இந்திய தலைமை இந்த வரையறைகளை அமைக்கிறது. IMF மற்றும் FSB ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட கொள்கை மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகள், மற்ற தரநிலை அமைப்பு அமைப்புகளுடன் எவ்வாறு ஒன்றாகப் பொருந்துகின்றன மற்றும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்கின்றன என்பதை ஆராய்கிறது" என்றார்.
இந்திய தலைமையின் கீழ் ஜி20 அமைப்பின் சாதனைகளை விவரித்த நிர்மலா சீதாராமன், "முதலாவதாக, 21 ஆம் நூற்றாண்டில் பகிரப்பட்ட உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள பலதரப்பு வளர்ச்சி வங்கிகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தினோம்.
இதில், 4 முக்கிய சிறப்பம்சங்கள் உள்ளன. முதலாவதாக, சிறந்த, பெரிய மற்றும் பயனுள்ள பலதரப்பு வளர்ச்சி வங்கிகளின் தேவை குறித்த உடன்பாடு. உலகெங்கிலும் உள்ள வளர்ச்சிக்கான கோரிக்கைகள் அதிகமாக இருப்பதால், இந்த நிறுவனங்கள் சிறப்பாகவும் பெரியதாகவும் இருக்க வேண்டும் என்பதால், சிறந்த பெரிய மற்றும் மிகவும் பயனுள்ள பலதரப்பு வளர்ச்சி வங்கிகளை வைத்திருப்பது அவசியம். முடிவெடுப்பதில் வளரும் நாடுகளின் பிரதிநிதித்துவத்தையும் குரலையும் மேம்படுத்துவதற்கும் இது பங்களிக்கும்" என்றார்.