Rs 2000 Note: நாளை முதல் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றலாம்; எப்படி? வாடிக்கையாளருக்கு என்ன வசதிகள்?
நாளை முதல் ரூ. 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என ஆர்பிஐ அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் நாளை முதல் ரூ. 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என ஆர்பிஐ அறிவித்துள்ளது.
அண்மையில் ரூபாய் 2 ஆயிரம் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. ஏற்கனவே ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் குறைந்த அளவே அச்சடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புழக்கத்தில் இருந்து நீக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், ”ஆர்.பி.ஐ. சட்டவிதி 24 (1)ன் படி, 2016ம் ஆண்டு ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்பட்டன. இந்த ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் 2018 – 2019ம் ஆண்டு அச்சடிப்பது நிறுத்தப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கையின்படி, ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 2 ஆயிரம் மதிப்பிலான நோட்டுகள் தற்போது செல்லுபடியாகும். மே 23-ம் தேதி முதல் எந்த வங்கியிலும் ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை மற்ற வகைகளின் ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டது.
போதிய இட வசதி, குடிநீர் வசதி
மேலும், நாளை முதல் ரூ. 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என ஆர்பிஐ அறிவித்துள்ளது. இதற்கான உரிய ஏற்பாடுகள் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ரூபாய் நோட்டை மாற்ற வரும் வாடிக்கையாளர்களுக்கு போதிய இட வசதி, குடிநீர் உள்ளிட்டவற்றையும் செய்து தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோட்டுகளை மாற்றுவதற்கான படிவத்தையும் ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. நாளை முதல் செப்டம்பர் 20 ஆம் தேதி வரை இந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றில், தனிநபர்கள் 2000 ரூபாய் நோட்டை மற்ற பணத்துடன் மாற்றிக்கொள்ளலாம். இந்த நோட்டுகளை மாற்ற 20 ஆயிரம் ரூபாய் வரை வரம்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒருவர், ஒரு நாளைக்கு, 10 நோட்டுகள் வரை மாற்றிக்கொள்ளலாம்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ், “அப்போது நடைமுறையில் இருந்த ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளின் சட்டப்பூர்வ டெண்டர் நிலை இருந்தபோது, பணத்தின் மதிப்பை விரைவாக நிரப்பும் நோக்கத்தில்தான் ரூ.2000 நோட்டுகள் முதன்மையாக வெளியிடப்பட்டன. அந்த நோக்கம் நிறைவேறி விட்டது. இன்று போதுமான அளவு மற்ற வகை நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.
ஏற்கனவே விளக்கியபடி ரூ. 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் கூட அதன் உச்சமான 6 லட்சத்து 73,000 கோடியிலிருந்து சுமார் 3 லட்சத்து 62,000 கோடியாகக் குறைந்துள்ளது. அச்சிடும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது ரிசர்வ் வங்கியின் நாணய மேலாண்மை நடவடிக்கைகளின் ஒரு பகுதி என்பதை தெளிவுபடுத்தி மீண்டும் வலியுறுத்துகிறேன். நீண்ட காலமாக ரிசர்வ் வங்கி clean note policy பின்பற்றி வருகிறது. அவ்வப்போது, ரிசர்வ் வங்கி நோட்டுகளை திரும்பப் பெற்று ஒரு குறிப்பிட்ட தொடர் மற்றும் புதிய நோட்டுகளை வெளியிடும்” என குறிப்பிட்டார்.