புதிய ஆண்டு 2022: அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய வங்கியின் முக்கியமான மாற்றங்கள்.. ஓர் பார்வை
வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய இந்தப் புதிய திட்டங்கள் என்னென்ன...

புதிய ஆண்டுத் தொடக்கத்தில் வங்கிகள் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
கணக்கு டெபாசிட்களுக்கான சார்ஜிங் கட்டணத்தை இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி அறிவித்துள்ளது. ஜனவரி 1 2022 தொடங்கி இந்த கட்டணம் நடைமுறைக்கு வருகிறது. வங்கியில் இருந்து பணத்தை எடுக்கும் அளவைப் பொறுத்து வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்தவேண்டும். இதனை வங்கி அண்மையில் அறிவித்துள்ளது.
வங்கி லாக்கர்களுக்கான திட்டம்
ஜனவரி 2022 முதல், ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி, உங்கள் வங்கி லாக்கர்கள் கூடுதல் பாதுகாப்பினைப் பெற உள்ளது. வங்கியின் அலட்சியத்தால் ஒருவேளை வாடிக்கையாளரின் லாக்கர் சமரசம் செய்யப்பட்டால் அந்தச் சூழலில் வங்கிகள் பொறுப்பை மறுக்க முடியாது என்று அந்தப் புதிய விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பது காஸ்ட்லியாகிறதா?
இந்த வங்கி என்று குறிப்பிட்டு இல்லாமல் இனி எந்த வங்கி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்தாலும் அதற்கான கட்டணம் அதிகரிக்கப்படும். இதற்கான அறிவிப்பை ஆர்.பி.ஐ. அண்மையில் வெளியிட்டுள்ளது.
வங்கி கே.ஒய்.சி
வங்கியில் கணக்குகளைத் தொடங்க நினைப்பவர்கள் அவர்களுடைய கே.ஒய்.சி., விண்ணப்பத்தை பூர்த்தி செய்யாத நிலையில் அவர்களுடைய கணக்கு டிசம்பர் 31க்குள் ப்ரீஸ் செய்யப்படும் எனக் கூறப்பட்டது. அது தற்போது ஒரு நாள் தாமதப்படுத்தப்பட்டு ஜனவரி 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்கு வைத்திருக்கும் நபர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் ஏடிஎம்மை பயன்படுத்தி மாதம் ஐந்து முறையும், பிற வங்கிகளின் ஏடிஎம்களில் மாதத்திற்கு மூன்று முறையும் இலவசமாக பணம் எடுத்தல் உள்ளிட்ட பரிவர்த்தனைகளை செய்யலாம்.
அதற்கு மேல் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணமானது வசூலிக்கப்படுகிறது. அதன்படி அனுமதிக்கப்பட்ட இலவச பரிமாற்றத்திற்கு பிறகு செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இதுவரை 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுவந்தது. வசூலிக்கப்படும் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், இந்தக் கட்டணத்தை குறைக்க வேண்டுமெனவும் வாடிக்கையாளர்கள் பலர் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், அனுமதிக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் இன்று முதல் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.அதன்படி, இதுவரை 20 ரூபாயாக பிடிக்கப்பட்டிருந்த கட்டணமானது இன்றிலிருந்து 21 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. மேலும் ஏடிஎம் பராமரிப்பு, பாதுகாப்பு செலவினங்களுக்காக நிதி தேவை அதிகரித்துள்ளது.எனவே அதை கருத்தில் கொண்டு இந்தக் கட்டணமானது அதிகரிக்கப்படுவதாகவும், இது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. புத்தாண்டு தினத்தன்று ரிசர்வ வங்கி இவ்வாறு அறிவித்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தக் கட்டணத்தை குறைக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்திவருகின்றனர்.





















