மோடியின் உரையை கேட்பதற்காக ஆளுநர் மாளிகைக்கு ஓடோடி வந்த முன்னாள் ராணுவ அதிகாரி..!
பல்வேறு மாநிலங்களில் இருந்து மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியை நேரலையாக கேட்டனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு, பிரதமராக மோடி பொறுப்பேற்றதில் இருந்து மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 11 மணி முதல் 11.30 மணி மணி வரை மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு ஹிந்தியில் உரையாற்றி வருகிறார் மோடி.
மன் கி பாத்தின் 100ஆவது எபிசோட்:
இந்த மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் தமது கருத்துகளை பகிர்ந்து கொண்டு வருகிறார். பிரதமர் மோடி உரையாடுவது பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நாடு முழுவதும் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இந்த சூழலில் மன் கி பாத்தின் 100ஆவது எபிசோட் இன்று ஒலிபரப்பு செய்யப்பட்டது.
மன் கி பாத்தின் 100ஆவது எபிசோட்டை ஒலிபரப்பு செய்ய நாடு முழுவதும் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் இருந்து மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியை நேரலையாக கேட்டனர்.
முதிர்ந்த வயதிலும் ஆளுநர் மாளிகைக்கு வந்த முன்னாள் ராணுவ அதிகாரி:
அந்த வகையில், தமிழ்நாட்டிலும் ஆளுநர் மாளிகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில், பங்கேற்பதற்காக முதிர் வயதையும் பொருட்படுத்தாமல் ஆளுநர் மாளிகைக்கு முன்னாள் ராணுவ அதிகாரி வந்திருந்தார். இந்த சம்பவம், அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய மோடி, "மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி திகழ்கிறது. இந்த நிகழ்ச்சியில் பாசிட்டிவிட்டியையும் மக்கள் பங்கேற்பையும் கொண்டாடினோம். 'பேட்டி பச்சாவ், பேட்டி படாவ்' விழிப்புணர்வு ஹரியானாவில் பாலின விகிதத்தை மேம்படுத்தியுள்ளது.
'பேட்டி பச்சாவ், பேட்டி படாவ்' என்ற விழிப்புணர்வு ஹரியானாவில் இருந்தே தொடங்கினேன். 'செல்ஃபி வித் டாட்டர்' பிரச்சாரம் என்னை மிகவும் பாதித்தது. அதை நிகழ்ச்சியின் ஒரு எபிசோட்டில் குறிப்பிட்டேன். விரைவில் இந்த 'செல்ஃபி வித் டாட்டர்' பிரச்சாரம் உலகமயமாகிறது. இந்த பிரச்சாரத்தின் நோக்கம் ஒருவரின் வாழ்க்கையில் மகளின் முக்கியத்துவத்தை மக்களுக்கு புரிய வைப்பதாகும்
மணிப்பூரைச் சேர்ந்த விஜயசாந்தி தாமரை இழைகளில் இருந்து ஆடையை தயாரிக்கிறார். அவரின் தனித்துவமான யோசனை குறித்து மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினேன். அவரது பணி இன்னும் பிரபலமானது. #MannKiBaat ஆனது ஆத்மநிர்பர் பாரதத்தை ஊக்குவிப்பது முதல் மேக் இன் இந்தியா மற்றும் விண்வெளி ஸ்டார்ட்அப்கள் வரை பல்வேறு துறைகளில் திறமையான நபர்களின் கதைகளை காட்சிப்படுத்தியுள்ளது.
பொம்மைத் தொழிலை மீண்டும் நிறுவுவதற்கான நோக்கம் மன் கி பாத் மூலம் தொடங்கியது. பல வெகுஜன இயக்கங்களைத் தூண்டுவதில் மன் கி பாத் உத்வேகமாக இருந்துள்ளது. மன் கி பாத் வெகுஜன இயக்கங்களை வேகம் பெறச் செய்துள்ளது. மன் கி பாத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், பேசப்பட்ட சக குடிமக்களின் திறன்கள் மற்றவர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளன" என்றார்.