வெளியுறவுக்கு நேரு.. சட்டத்துக்கு அம்பேத்கர்.. சுதந்திர இந்தியாவுக்கு விதை போட்ட முதல் அமைச்சரவை!
நெருக்கடியான சூழலில் இந்தியாவுக்கு விதை போட்ட முதல் அமைச்சரவையில் யார் இடம்பெற்றார்கள் என்பது பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
இரண்டாம் உலகப்போரில் பிரிட்டனுக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு, தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது, இந்தியாவில் விடுதலை போராட்டத்தில் ஏற்பட்ட எழுச்சி ஆகியவை காரணமாக இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது.
கடந்த 1947ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி நள்ளிரவு, ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்து இந்தியா விடுப்பட்டது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகால காலனி ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. அதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திரம் தினம் கொண்டாடப்படுகிறது.
சுதந்திர போராட்டத்தில் மட்டும் இன்றி சுதந்திரத்திற்கு பிறகும் இந்தியாவுக்கு பெரும் சவால்கள் காத்திருந்தன. தேச பிரிவினை, இந்து முஸ்லிம் பிரச்னை, ஏழ்மை என பல சவால்களுக்கு மத்தியில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றது.
நெருக்கடியான காலக்கட்டம் என்றாலும் மிகவும் திறமை வாய்ந்த, அனுபவமிக்க, துடிப்பான தலைவர்கள் நம்மை வழிநடத்தியதால் எந்த வித சிக்கலும் இன்றி இந்தியா முன்னேறியது. நாட்டுக்கு விதை போட்ட முதல் அமைச்சரவையில் யார் இடம்பெற்றார்கள் என்பது பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
ஜவஹர்லால் நேரு:
நாட்டின் முதல் பிரதமரான நேரு, கூடுதலாக வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். அதை தவிர, காமன்வெல்த் உறவுகள்; அறிவியல் ஆராய்ச்சி துறைகளையும் கவனித்து வந்தார்.
சர்தார் வல்லபாய் பட்டேல்:
நாட்டின் முதல் துணை பிரதமரான வல்லபாய் படேல், உள்துறை அமைச்சராக பதவி வகித்தார். இதை தவிர, தகவல் மற்றும் ஒளிபரப்பு; மாநிலங்கள் ஆகிய துறைகளை கூடுதலாக கவனித்து வந்தார்.
டாக்டர். ராஜேந்திர பிரசாத்:
சுதந்திர இந்தியாவில் உணவு மற்றும் விவசாயத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் ராஜேந்திர பிரசாத். இதையடுத்து, நாட்டின் முதல் குடியரசு தலைவராகவும் பதவி வகித்தார்.
மவுலானா அபுல் கலாம் ஆசாத்:
சுதந்திர இந்தியாவின் முதல் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் மவுலானா அபுல் கலாம் ஆசாத்.
டாக்டர். ஜான் மத்தாய்:
இந்தியாவின் முதல் ரயில்வே மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜான் மத்தாய்.
சர்தார் பல்தேவ் சிங்:
நாட்டின் முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் பல்தேவ் சிங்.
ஜெகஜீவன்ராம்:
தேசத்தின் முதல் தொழிலாளர் துறை அமைச்சர் ஜெகஜீவன்ராம்.
சி.எச். பாபா:
இந்தியாவின் முதல் வர்த்தகத்துறை அமைச்சர் சி.எச். பாபா ஆவார்.
ரஃபி அஹ்மத் கித்வாய்:
நாட்டின் முதல் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரஃபி அஹ்மத் கித்வாய்.
ராஜ்குமாரி அம்ரித் கவுர்:
தேசத்தின் முதல் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜ்குமாரி அம்ரித் கவுர்.
டாக்டர் பி.ஆர் அம்பேத்கர்:
சுதந்திர இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சர் அம்பேத்கர் ஆவார்.
ஆர்.கே. சண்முகம் செட்டி:
நாட்டின் முதல் நிதித்துறை அமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டி ஆவார்.
டாக்டர். சியாமா பிரசாத் முகர்ஜி:
தொழில் மற்றும் விநியோகத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் சியாமா பிரசாத் முகர்ஜி.
நர்ஹர் விஷ்ணு காட்கில்:
சுரங்கங்கள் மற்றும் எரிசக்தித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் என். வி. காட்கில்.