பஞ்சாபை பதற வைக்கும் விவசாயிகள் போராட்டம்.. ரயில் மறியல் காரணமாக இயல்பு வாழ்க்கை முடக்கம்
மோகா, ஹோஷியார்பூர், குர்தாஸ்பூர், ஜலந்தர், தர்ன் தரண், சங்ரூர், பாட்டியாலா, ஃபெரோஸ்பூர், பதிண்டா அமிர்தசரஸ் உள்பட மாநிலம் முழுவதும் 17 இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
பஞ்சாபில் முக்கிய தொழிலாக விவசாயமே இருந்து வருகிறது. மொத்தம் மக்கள் தொகையில் 39 சதவிகிதத்தினர் அங்கு விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப் பொருளாதாரத்தில் வேளாண்துறையே பெரும் பங்காற்றி வருகிறது.
பஞ்சாபை பதற வைக்கும் விவசாயிகள் போராட்டம்:
இப்படிப்பட்ட சூழலில், அங்கு விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டு வரும் சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். அமிர்தசரஸ் - டெல்லி ரயில் பாதையை மறித்து விவசாயிகள் குழு இன்று போராட்டத்தை தொடர்ந்தனர்.
போராட்டத்திற்கு ஆதரவாக சண்டிகர்-அம்பாலா தேசிய நெடுஞ்சாலையை மற்றொரு விவசாயிகள் குழு முடக்கியது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "நெடுஞ்சாலையின் இருபுறமும் முடக்கப்பட்டது. இதனால், போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது" என்றனர்.
இதற்கிடையில், ஆசாத் கிசான் கமிட்டியின் உறுப்பினர்கள், ஹோஷியார்பூரில் உள்ள உள்ளூர் ரயில் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். வெள்ளத்தில் ஏற்பட்ட இழப்புகளுக்கு நிதியுதவி, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், கடன் தள்ளுபடி உள்ளிட்டகோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
150 பயணிகள் ரயில் ரத்து:
கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி, பார்தி கிசான் யூனியன் (கிராந்திகாரி), பிகேயு (ஏக்தா ஆசாத்), ஆசாத் கிசான் கமிட்டி தோபா, பிகேயு (பெஹ்ராம்கே), பிகேயு (ஷாஹீத் பகத் சிங்), பிகேயு (சோட்டு ராம்) உள்ளிட்ட பல விவசாயிகள் குழுக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளன.
ரயில் மறியல் குறித்து வடக்கு ரயில்வே பொது மேலாளர் ஷோபன் சவுத்ரி கூறுகையில், "இதுவரை 90 மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் 150 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் நிலைமையை ஆய்வு செய்து வருகிறோம்" என்றார்.
விவசாயிகள் கேட்பது என்ன?
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "போராட்டம் காரணமாக பல ரயில்களின் வழித்தடங்கள் திருப்பி விடப்பட்டன. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. போராட்டங்கள் தொடர்ந்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் சில ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டன. இதனால் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பல பயணிகள் தவித்தனர்" என்றனர்.
மோகா, ஹோஷியார்பூர், குர்தாஸ்பூர், ஜலந்தர், தர்ன் தரண், சங்ரூர், பாட்டியாலா, ஃபெரோஸ்பூர், பதிண்டா அமிர்தசரஸ் உள்பட மாநிலம் முழுவதும் 17 இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. டெல்லி, பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான ரயில் பயணிகள் நேற்று ஹரியானாவில் உள்ள அம்பாலா கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்தனர்.
இதுகுறித்து விவசாய சங்கத்தலைவர் குர்பச்சன் சிங் கூறுகையில், "வட இந்திய மாநிலங்களுக்கு ரூ. 50,000 கோடி வெள்ள நிவாரண உதவி வேண்டும். சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகளுடன் குறைந்தபட்ச ஆதரவு விலை ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும்" என்றார்.