facilitate Vaccinations for Beggars: தெருவோரம் வசிப்பவர்களுக்கு தடுப்பூசி; மத்திய அரசு அறிவுறுத்தல்!
இணையதள வசதி அல்லது ஸ்மார்ட் செல்பேசி அல்லது செல்பேசியே இல்லாதவர்கள்கூட அனைத்து அரசு தடுப்பூசி மையங்களுக்கும் நேரடியாகச் சென்று தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆதரவற்ற பெண்கள் / பிச்சைக்காரர்கள் / வீடற்றவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியைத் தொடங்க வேண்டும் என மாநில/ யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை, 45 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. அடையாள அட்டைகள் இல்லாத நாடோடிகள், கைதிகள், மனநல மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறுவோர், முதியோர் இல்லங்களில் இருப்போர், பிச்சைக்காரர்கள், மறுவாழ்வு மையங்களில் இருப்போர் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு தடுப்பு மருந்து வழங்குவதற்கான தேவையை இந்திய அரசு உணர்ந்துள்ளது.
மேலும், 2021 மே 6ம் தேதியிட்ட சுற்றரிகையைல், வீடு இல்லாத ஆதரவற்ற மக்கள் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வதற்கான நிலையான இயக்க நடைமுறைகள் வெளியிடப்பட்டன. அதன்கீழ், தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய செல்பேசி வைத்திருப்பது கட்டாயமல்ல, தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்கு இருப்பிடச் சான்றை அளிப்பதும் கட்டாயமல்ல, கோவின் தளத்தில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. இணையதள வசதி அல்லது ஸ்மார்ட் செல்பேசி அல்லது செல்பேசியே இல்லாதவர்கள்கூட அனைத்து அரசு தடுப்பூசி மையங்களுக்கும் நேரடியாகச் சென்று தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
எனவே, அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஆதரவற்ற பெண்கள் / பிச்சைக்காரர்கள் / வீடற்றவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியைத் தொடங்க வேண்டும்" என மத்திய சுகாதாரத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பொதுமுடக்க நிலை: கொரோனா தொற்று பொது முடக்க நிலை அமல் காரணமாக, தற்போது பிச்சை எடுப்போர், சாலைகளில் சுற்றித் திரியும் பலர் பட்டினியால் அதிக சிரமங்களுக்கு ஆளாகினர். பிச்சைக்காரர்கள் மற்றும் சாலைகளில் சுற்றித் திரிபவர்களுக்கு சமைத்த உணவை இலவசமாக வழங்குவதற்கு, உணவளிக்கும் மையங்களை உடனடியாக ஏற்படுத்துமாறு மத்திய சமூகநலத்துறை அமைச்சகம் மாநிலங்களை கேட்டுக்கொண்டது.
பிச்சைக்கார்கள் எண்ணிக்கை: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் பிச்சைக்காரர்கள், சாலையில் சுற்றித் திருபவர்களின் மொத்த எண்ணிக்கை 4,13,670 ஆக உள்ளது. இதில், 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 45,296 ஆக உள்ளது. நாட்டின் பெரும்பாலான பிச்சைக்காரர்கள் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளனர். அதனைத் தொடர்ந்து உத்தரபிரதேசம், ஆந்திரா, பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ளனர். வடகிழக்கு மாநிலங்கள் (அசாம் தவிர்த்து), தமிழ்நாடு, கேரளா, ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சற்று குறைந்து காணப்படுகிறனர்.
வீடற்றவர்களின் எண்ணிக்கை: 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 17,73,040 வீடற்ற நபர்கள் இருந்துள்ளனர். தமிழகத்தில் 2001ஆம் ஆண்டில் 86,472 ஆக இருந்த இந்த எண்ணிக்கை, 2011ஆம் ஆண்டில் 50,929 ஆகக் குறைந்துது.