Chhattisgarh Exit Poll: சத்தீஸ்கரில் பாஜகவுக்கு ஆட்டம் காட்டிய காங்கிரஸ்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Chhattisgarh Exit Poll Results 2023: பழங்குடியினர் அதிக எண்ணிக்கையில் வாழும் சத்தீஸ்கரில் இந்த முறை யார் ஆட்சி அமைப்பார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ABP Cvoter Chhattisgarh Exit Poll Results 2023: பாஜகவின் கோட்டையாக இருந்த சத்தீஸ்கரில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் இருந்து சில பகுதிகளை பிரித்து உருவாக்கப்பட்ட மாநிலம்தான் சத்தீஸ்கர். மாநில மக்கள் தொகையில் 30 சதவிகிதத்தினர், பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள். மாநிலம் உருவாக்கப்பட்டு முதல் மூன்று ஆண்டுகள் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அங்கு நடைபெற்றது.
2003ஆம் ஆண்டுக்கு பிறகு, 2018ஆம் ஆண்டு வரை, பாஜகவின் கோட்டையாக இருந்தது. தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்று பெற்று பாஜக ஆட்சி அமைத்தது. இப்படிப்பட்ட சூழலில், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், 15 ஆண்டுகளுக்கு பிறகு, சத்தீஸ்கரில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்.
பழங்குடியினர் அதிகம் வாழும் சத்தீஸ்கர்:
காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேஷ் பாகல் தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இச்சூழலில், சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நவம்பர் 7ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும் 17ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் வரும் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி எண்ணப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஏபிபி செய்தி நிறுவனம், சி வோட்டருடன் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, சத்தீஸ்கரில் 41 முதல் 53 தொகுதிகளில் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான பாஜக, 36 முதல் 48 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 0 முதல் 4 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவிடம் நேரடியாக மோதும் காங்கிரஸ்:
வரவிருக்கும் தேர்தலில் 43.4 சதவிகித வாக்குகளை காங்கிரஸ் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பாஜக 41.2 சதவிகித வாக்குகளை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பின்போது, எந்த விவகாரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள் என எழுப்பிய கேள்விக்கு வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு என பெரும்பான்மையான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
யார் முதலமைச்சராக வர வேண்டும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகலுக்கு ஆதரவாக 45.8 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முன்னாள் முதலமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ராமன் சிங்குக்கு 20.7 சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆட்சி மாற்றம் நடக்க வேண்டுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, தாங்கள் கோபமாக இருப்பதாகவும் ஆட்சி மாற்றம் நடந்தே தீர வேண்டும் என 48.5 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மாநில அரசின் மீது கோபமாக இருக்கிறோம், ஆனால், ஆட்சி மாற்றம் நடக்க விரும்பவில்லை என 6.7 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மாநில அரசின் மீது கோபம் இல்லை, ஆட்சி மாற்றம் நடக்க விரும்பவில்லை என 44.8 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.