Elections in 2024: நாடாளுமன்ற தேர்தல் பரபரபரப்பு - 2024-இல் 6 மாநிலங்களில் ஆட்சி மாற்றமா? மாநில கட்சிகள் மீண்டு வருமா?
Elections In 2024: நடப்பாண்டில் நாடாளுமன்ற தேர்தலோடு ஆந்திர உட்பட 6 மாநிலங்களில் மட்டுமின்றி, ஜம்மு & காஷ்மீரிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
Elections In 2024: நடப்பாண்டில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நான்கு மாநிலங்களில் சட்டமன்றத்திற்கான தேர்தலும் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல்:
அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் ஒட்டுமொத்தமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதேநேரம், மிகவும் எதிர்பார்க்கப்படும் ஜம்மு & காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் உடன், இந்த ஆண்டின் இறுதி வரையில் 6 மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. அதன்படி, ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படலாம். அதே நேரத்தில் இந்த ஆண்டு இறுதியில் ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற உள்ளது. 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ள ஜம்மு & காஷ்மீருக்கு, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டியது குறிப்பிடத்தக்கது.
பாஜக ஆதிக்கம்:
பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக தீவிரம் காட்ட, பிரமாண்ட கூட்டணி மூலம் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தயாராகி வருகின்றன. மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 12 மாநிலங்களில் பாஜக நேரடியாகவும், 4 மாநிலங்களில் கூட்டணி ஆட்சியையும் நடத்தி வருகிறது. அதேநேரம், காங்கிரஸ் 3 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்து வருகிறது. அதன் கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்திலும், ஜார்கண்ட் முக்தி மோச்சா ஜார்கண்டிலும், ஆம் ஆத்மி டெல்லி மற்றும் பஞ்சாபிலும், திமுக தமிழ்நாட்டிலும் ஆட்சியில் உள்ளன. இந்த சூழலில் தேர்தல் நடைபெற உள்ள 6 சட்டமன்ற தேர்தல்களில், தேசிய கட்சிகளை விட மாநில கட்சிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திர சட்டமன்ற தேர்தல்:
ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண், தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்திருப்பது அக்கட்சிக்கு ஊக்கத்தை அளித்துள்ளது. பாதயாத்திரை அரசியலுக்கு புகழ்பெற்ற இந்த மாநிலத்தில் தேர்தலை முன்னிட்டு பல கட்சிகள் பாதயாத்திரை மற்றும் பேருந்து யாத்திரையை தொடங்கியுள்ளன. மறுமுனையில் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா காங்கிரசில் இணைந்து இருப்பது, மாநில அரசியலிலில் புதிய திருப்பமாக அமைந்துள்ளது. இதனால், இந்த சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. 2019 தேர்தலில் மொத்தமுள்ள 175 இடங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 151 இடங்களைக் கைப்பற்ற, தெலுங்கு தேசம் 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
ஒடிசா சட்டமன்ற தேர்தல்:
தொடர்ந்து ஆறாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்ற முதலமைச்சர் நவீன் பட்நாயக் இலக்கு நிர்ணயித்துள்ளார். ஜெகநாதர் கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை புதுப்பித்தல் உள்ளிட்ட அதன் '5டி' மாற்றும் முயற்சியின் மூலம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயல்கிறார். மத்திய அமைச்சரும், ஒடிசாவின் முன்னணி தலைவருமான தர்மேந்திர பிரதான் தலைமையில் ஆட்சியை கைப்பற்ற பாஜக முனைப்பு காட்டுகிறது. அதேநேரம், பாஜக உடனான பிஜேடியின் உறவை முன்னிலைப்படுத்தி பரப்புரை செய்யும் காங்கிரஸ், தெலங்கானா மேஜிக்கை ஒடிசாவிலும் நிகழ்த்த முனைப்பு காட்டுகிறது. 2019 தேர்தலில் 147 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பிஜேடி 112 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக 23 இடங்களையும், காங்கிரஸ் 9 இடங்களையும் மட்டுமே கைப்பற்றின.
அருணாச்சலபிரதேச சட்டமன்ற தேர்தல்:
2014ம் ஆண்டு முதல் பாஜகவின் மிகப்பெரிய தேர்தல் சாதனைகளில் ஒன்று வடகிழக்கு மாநிலங்களில் அதன் செல்வாக்கை அதிகரித்தது தான். 2014ல் எந்தவொரு வடகிழக்கு மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத பாஜக, தற்போது மூன்று வடகிழக்கு மாநிலங்களில் தனித்து ஆட்சி செய்கிறது. அருணாச்சலப்பிரதேச தேர்தலில் பாஜகவிற்கு காங்கிரஸ், தேசியவாத மக்கள் கட்சி (NPP) மற்றும் ஆம் ஆத்மி கட்சி கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அருணாச்சல பிரதேச பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (ஏபிபிஎஸ்சி) கேள்வித்தாள் கசிவு வழக்கு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் ஆளும் பாஜகவிற்கு பின்னடைவாக அமைந்துள்ளன. 2019 தேர்தலில் மாநில சட்டமன்றத்தில் உள்ள 60 இடங்களில் பாஜக 41 இடங்களையும், JD(U) 7 இடங்களையும், காங்கிரஸ் 4 இடங்களையும் கைப்பற்றின.
சிக்கிம் சட்டமன்ற தேர்தல்:
சிக்கிம் மாநிலத்தில் பெரும்பாலும் சிக்கிம் ஜனநாயக முன்னணியின் கட்சியை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் பவன் குமார் சாம்லிங் மற்றும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்கேஎம்) தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான பிரேம் சிங் தமாங் இடையே தான் இருமுனைப் போட்டி நிலவுகிறது. 2019ம் ஆண்டு தேர்தலில் மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி, தோல்வி இறுதியானது. கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 32 சட்டமன்ற தொகுதிகளில் எஸ்கேஎம் 17 இடங்களையும், எஸ்டிஎஃப் 15 இடங்களையும் கைப்பற்றியது.
ஹரியானா சட்டமன்ற தேர்தல்:
இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு தொடர்பான பிரச்னையுடன், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியின் கடும் போட்டியால், ஹரியானா தேர்தல் பாஜகவிற்கும் அக்கட்சியை சேர்ந்த முதலமைச்சர் மனோகர் லால் கட்டாருக்கும் இந்த தேர்தல் அவ்வளவு எளிதாக இருக்காது என கூறப்படுகிறது. பிரிஜ் பூஷன் ஷரன் சிங்கிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் நூஹ்வில் வகுப்புவாத மோதல் ஆகிய இரண்டு சம்பவங்களும் கூட்டணிக் கட்சிகளான பாஜக மற்றும் ஜேஜேபி இடையே விரிசலை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் 40ல் ஜார் சமூகத்தினர் தான் பெரும்பான்மையாக உள்ளனர். அந்த சமூகத்தை சேர்ந்தவர் தான் பிரிஜ் பூஷன் சிங் என்பது குறிப்பிடத்தகக்து.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்:
2019 தேர்தலுக்குப் பிறகு சிவசேனா, தேசிய வாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிவசேனாவைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே மற்றும் மற்றும் தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித் பவார் ஆகியோர் பெரும்பான்மை ஏம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் கட்சியில் இருந்து பிரிந்து சென்று, பாஜகவுடன் இணைந்து தற்போது ஆட்சி நடத்தி வருகின்றனர். தற்போதையை சூழலில் மகாராஷ்டிராவில் மிகவும் வலிமையான கட்சியாக பாஜக உள்ளது. மராத்தியர்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு அக்கட்சிக்கு பெரும் சிக்கலாக இருக்கும். மறுமுனையில் காங்கிரஸ், சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதோடு, இடஒதுக்கீட்டில் மராத்தியர்களுக்கு 50 சதவீத வரம்பை உயர்த்தி வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இதனால், இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளது.
ஜம்மு & காஷ்மீர் சட்டமன்ற தேர்தல்:
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட ஜம்மு & காஷ்மிரில், வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. இதனால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பிடிபியும் பாஜகவும் இணைந்து ஆட்சி அமைத்தது. ஆனால், 2018ம் ஆண்டு அந்த ஆட்சி கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.