Ajit Pawar: சரத் பவாருக்கு பேரிடி.. தேசியவாத காங்கிரஸ் கட்சி யாருக்கு சொந்தம்? தேர்தல் ஆணையம் அதிரடி
தேசியவாத காங்கிரஸ் கட்சி யாருக்கு சொந்தம் என்பதில் தொடர் பிரச்னை நிலவி வந்த நிலையில், இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்திற்கு சென்றது.
கடந்தாண்டு, மகாராஷ்டிர அரசியலில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறியது. எதிர்க்கட்சியாக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுப்பட்டு இரண்டாக உடைந்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர்கள், சரத் பவாரின் ஒப்புதலின்றி, ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணி அரசாங்கத்தில் இணைந்தனர்.
பிளவை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் கட்சி:
மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார், சமீபத்தில்தான் துணை முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். அஜித் பவாருடன் அக்கட்சியை சேர்ந்த 8 மூத்த தலைவர்கள், அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுப்பட்ட நிலையில், சரத் பவாருக்கும் அவரின் அண்ணன் மகனுமான அஜித் பவாருக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
தேசியவாத காங்கிரஸ் கட்சி யாருக்கு சொந்தம் என்பதில் தொடர் பிரச்னை நிலவி வந்த நிலையில், இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்திற்கு சென்றது. இந்த நிலையில், அஜித் பவாரின் கட்சியை உண்மையான தேசியவாத காங்கிரஸ் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
அஜித் பவாருக்கு அடித்த ஜாக்பாட்:
அதன்படி, தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கடிகார சின்னமும் அஜித் பவாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான எம்எல்ஏக்களும் எம்பிக்களும் அஜித் பவாருக்கு ஆதரவாக இருந்ததால், தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
வரவிருக்கும் மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு தங்களின் பிரிவுக்கு தனிப் பெயரை தேர்வு செய்யும்படி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. பிப்ரவரி 7ஆம் தேதி மாலை 3 மணிக்குள் தங்கள் பிரிவின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
யார் இந்த சரத் பவார்?
இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் சரத் பவாரும் முக்கியமானவர். இவர்1958ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அரசியலில் உச்சங்களையும் வீழ்ச்சிகளையும் எதிர்கொண்டவர்.
காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிரிவுகளின்போது சரத் பவார் என்கிற பெயரும் அடிபட்டுக்கொண்டே இருந்தது. இவர் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக 4 முறை பதவி வகித்தார். காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும், மத்திய பாதுகாப்புத் துறை, வேளாண்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.
இத்தாலியில் பிறந்த காரணத்தால் சோனியா காந்தியை இந்திய தேசிய காங்கிரஸ் தலைவியாக ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களில் சரத் பவாரும் ஒருவர். இதனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். நீக்கப்பட்டதை தொடர்ந்து, மற்ற தலைவர்களுடன் இணைந்து 1999 ஆம் ஆண்டு மே மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்தனர்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியவர்களில் நீண்ட காலம் தனிக்கட்சியை தக்க வைத்துக் கொண்டவர்களில் சரத் பவார் குறிப்பிடத்தக்கவர். இருப்பினும், தேசிய அரசியலின் சூழல் காரணமாக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்து, காங்கிரஸ் கட்சிக்கு நட்பு சக்தியாகவும் இருந்து வருகிறார்.