போலி வாக்காளர்கள் இருக்காங்க? மகாராஷ்டிரா, டெல்லி இப்போ மேற்குவங்கம்.. மம்தா பரபர!
தேர்தல் ஆணையத்தின் ஆசீர்வாதத்துடன் வாக்காளர் பட்டியலில் பாஜக குளறுபடி செய்து வருவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். இதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

மகாராஷ்டிரா, டெல்லியை தொடர்ந்து மேற்குவங்கத்தில் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா குற்றச்சாட்டு சுமத்திய நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டை (இபிஐசி) எண்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும், பெயர் விவரங்கள், சட்டமன்றத் தொகுதி, வாக்குச் சாவடி உள்ளிட்ட பிற விவரங்கள் வேறுபட்டவை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
பரபரப்பை கிளப்பும் மம்தா:
தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்பட ஐந்து மாநிலங்களுக்கு அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மத்திய பாஜக அரசு மீதும் தேர்தல் ஆணையம் மீதும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பரபர குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் ஆசீர்வாதத்துடன் வாக்காளர் பட்டியலில் பாஜக குளறுபடி செய்து வருவதாக அவர் கூறியிருந்தார்.
"மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் உள்ள எதிர்க்கட்சிகள் இந்த தந்திரத்தை கண்டுபிடிக்கத் தவறிவிட்டன. ஆனால் நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் பாஜக இப்படித்தான் வெற்றி பெற்றது. இப்போது, அவர்கள் மேற்கு வங்கத்தை குறிவைக்கிறார்கள். நாங்கள் கடுமையாக பதிலடி கொடுப்போம்.
எல்லா மாவட்டங்களிலிருந்தும் எனக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஹரியானா மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் மேற்கு வங்காளவாசிகளின் பெயர்களுடன் ஒரே EPIC (தேர்தல் புகைப்பட அடையாள அட்டை) எண்ணின் கீழ் காணப்படுகின்றன. போலி வாக்காளர்கள் ஆன்லைனில் சேர்க்கப்பட்டுள்ளன" என மம்தா தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் விளக்கம்:
இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டை (இபிஐசி) எண்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும், பெயர் விவரங்கள், சட்டமன்றத் தொகுதி, வாக்குச் சாவடி உள்ளிட்ட பிற விவரங்கள் வேறுபட்டவை என தெளிவுபடுத்தியுள்ளது.
"வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பொருட்படுத்தாமல், எந்தவொரு வாக்காளரும் தங்கள் மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் அந்தந்த தொகுதியில் தங்களுக்கான வாக்குச் சாவடியில் மட்டுமே வாக்களிக்க முடியும். அங்குதான் அவர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். வேறு எங்கும் இல்லை.
பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சில வாக்காளர்களுக்கு ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள அட்டை எண்/தொடர் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்குக் காரணம், அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் வாக்காளர் பட்டியல் தரவுத்தளத்தை ஈரோநெட் தளத்திற்கு மாற்றுவதற்கு முன்னர் பரவலாக்கப்பட்ட முறை, கையேடு நடைமுறை ஆகியவை பின்பற்றப்பட்டன. இதன் விளைவாக சில மாநில / யூனியன் பிரதேச தலைமை அதிகாரி அலுவலகங்கள் ஒரே இபிஐசி எண்ணெழுத்து வரிசையைப் பயன்படுத்தின.
இருப்பினும், எந்தவொரு அச்சத்தையும் போக்க, பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு தனித்துவமான இபிஐசி எண்ணை ஒதுக்குவதை உறுதி செய்ய ஆணையம் முடிவு செய்துள்ளது. ஒரே மாதிரியான இபிஐசி எண் தொடர்பான எந்த ஒரு பிரச்சினையும் தனித்துவமான எண்ணை ஒதுக்குவதன் மூலம் சரிசெய்யப்படும். இந்த செயல்முறைக்கு உதவ ஈரோநெட் 2.0 (ERONET 2.0) தளம் புதுப்பிக்கப்படும்" என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

