EPS Pressmeet: “சூழ்நிலைக்காகத்தான் கூட்டணி; கொள்கை இதுதான்; ஸ்டாலினுக்கு அருகதை இல்லை” - டெல்லியில் இபிஎஸ் பேட்டி
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 330 இடங்கள் கைப்பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றிப்பெரும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கும், ஆலோசனைக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட, 38 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். மோடி பிரதமராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது இதுவே முதல் முறை. இதில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல், தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக எப்போதும் ஒத்த கருத்து இருக்கும் கட்சியுடன் இணைந்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் 9 ஆண்டு காலங்களில் ஏற்பட்ட முன்னேற்றத்தை பார்க்க வேண்டும். கொரோனா காலத்தில் உலக அளவில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டாலும், இந்தியாவில் அப்படி எதுவும் நிகழவில்லை. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 330 இடங்கள் பிடித்து மாபெரும் வெற்றியை கைப்பற்றுவோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் சிறிய பெரிய கட்சி என பார்க்காமல் அனைத்து கட்சிக்கும் மரியாதை வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது. அதிமுகவில் 1.50 கோடியாக இருந்த தொண்டர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது” என தெரிவித்தார்.
மேலும், “ இந்தியாவிலேயே உழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு தான். அவர்களுக்கு எங்களை பற்றி பேச அருகதை கிடையாது. காங்கிரஸ் ஆட்சி மத்தியில் இருக்கும் போது 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி மற்றும் ராசா கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எங்களை பற்றி பேச அருகதை இல்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அமைச்சர் பொன்முடி மீது அமலாககத்துறை தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி ஊழல் செய்பவர்கள் தான் திமுகவினர். என் மீதான ஆர்.எஸ் பாரதி தொடர்ந்த வழக்கில் நேற்றைய தீர்ப்பு நீதிக்கு கிடைத்த தீர்ப்பாகும். திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறது” என திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ” ஓபிஎஸ் திமுகவின் பி டீமாக செயல்படுகிறார். அதனால் தான் அவர் திமுகவிற்கு முட்டு கொடுக்கிறார். கோடநாடு வழக்கில் நடவடிக்கை எடுத்தது அதிமுக தான். குற்றவாளிகளை கண்டுபிடித்தது அதிமுக தான். ஆனால், அவர்களுக்கு ஜாமீன் வாங்கி கொடுத்தது திமுக வழக்கறிஞர்” என குறிப்பிட்டார். மேலும், திராவிட கட்சிகள் இந்திய அளவில் வலுபெறுகிறதா என்ற கேள்விக்கு கூட்டணி என்பது சூழலுக்கு ஏற்றவாறு அமைப்பது. ஆனால் கொள்கை என்பது நிலையானது எனக் குறிப்பிட்டார். மேலும், அதிமுக தலைமையில் தமிழ்நாட்டில் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு, திமுக தலைமையில் இருக்கும் கூட்டணி அடிமைக் கூட்டணி. ஆனால் அதிமுக கூட்டணியில் அனைவரும் சுதந்திரமாக செயல்படுகிறார்கள் என பதிலளித்துள்ளார்.