அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா..? அரசியலமைப்பு சொல்வது என்ன?
அமைச்சரை ஆளுநரால் பதவி நீக்கம் செய்ய முடியுமா? ஆளுநருக்கு அந்த அதிகாரம் உள்ளதா? அரசியலமைப்பு என்ன சொல்கிறது என்பதை கீழே பார்ப்போம்.
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்வதாக ஆளுநர் ஆர்.என். ரவி அறிவித்திருப்பது தமிழ்நாட்டு அரசியலில் புதிய புயலை கிளப்பிள்ளது. குறிப்பாக, முதலமைச்சரின் ஒப்புதல் இன்றி அமைச்சர் ஒருவரை ஆளுநர் நீக்குவது அரிதிலும் அரிதான ஒன்று. சமீப காலத்தில், இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதாக நினைவில் கூட இல்லை.
கேரளாவில் நடந்தது என்ன?
இதேபோன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் கேரளாவில் நடந்தது. ஆளுநரின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்துவிடுவேன் என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் எச்சரிக்கை விடுத்திருந்தார். எச்சரிக்கை விடுத்தாரே தவிர, அவர் அமைச்சரை பதவி நீக்கம் செய்யவில்லை. ஆனால், தற்போது, ஒரு படி மேலே சென்று அமைச்சர் ஒருவரை தமிழ்நாடு ஆளுநர் பதவி நீக்கம் செய்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அமைச்சரை ஆளுநரால் பதவி நீக்கம் செய்ய முடியுமா? ஆளுநருக்கு அந்த அதிகாரம் உள்ளதா? அரசியலமைப்பு என்ன சொல்கிறது என்பதை கீழே பார்ப்போம்.
"அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை"
இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் கூறுகையில், "அமைச்சரவையின் ஆலோசனையின்றி ஆளுநர் அப்படி நடவடிக்கை எடுக்க முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, முதலமைச்சராக பொறுப்பேற்க தகுதியான நபரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மட்டுமே ஆளுநருக்கு உள்ளது. முதலமைச்சரின் பரிந்துரைப்படியே, அமைச்சர்களை ஆளுநர் நியமித்து வருகிறார். ஆனால், அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை" என்றார்.
"அரசியலமைப்பு சட்டப்பிரிவு 164(1)இன்படி, முதலமைச்சரின் ஆலோசனையின் பேரிலேயே ஆளுநர் செயல்பட வேண்டும்" என சட்ட வல்லுநரும் முன்னாள் மக்களவை செயலாளருமான பி.டி.டி. ஆச்சாரி கூறுகிறார்.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 164(1) என்ன சொல்கிறது?
முதலமைச்சர் ஆளுநரால் நியமிக்கப்படுவார். மற்ற அமைச்சர்கள், முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள். ஆளுநரின் விருப்பப்படி அமைச்சர்கள் பதவி வகிப்பார்கள்.
ஆளுநரின் விருப்பப்படி அமைச்சர்கள் பதவி விகிப்பார்கள் என்றால் ஆளுநரால் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய முடியுமா என கேள்வி எழுகிறது. இந்த குறிப்பிட்ட வாக்கியத்தை விளக்கிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எம்.ஆர். அபிலாஷ், "முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் அவர் எந்த நேரத்திலும் பதவி நீக்கப்படலாம் என்பது தான் அதற்கு பொருள். ஆளுநர் தனது விருப்பப்படி அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் உரிமையை அரசியல் சாசனம் வழங்கவில்லை" என்றார்.
இதுகுறித்து கேரள அரசின் தலைமை வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண குருப் கூறுகையில், "அரசியலமைப்புச் சட்டம் ஆளுநருக்கு அப்படிப்பட்ட அதிகாரத்தை வழங்கவில்லை" என்றார்.