Tirupati Tirumala: மீண்டும் திருப்பதி மலைப்பாதையில் கரடி, சிறுத்தை; கேமராவில் பதிவான நடமாட்டம் - பயத்தில் பக்தர்கள்!
திருப்பதி மலையில் சிறுத்தை, கரடி நடமாட்டம் இருப்பதால் பக்தர்களுக்கு அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
திருப்பதி திருமலையில் உள்ள மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை, கரடிகளின் நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
திருப்பதி கோயில்:
ஆந்திராவில் உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமையான் கோயில் உள்ளது. இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். ஆந்திராவை சுற்றியுள்ள தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவை சேர்ந்த பக்தர்களே இங்கு அதிகளவில் தரிசனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில், திருப்பதி திருமலையில் உள்ள மலைப்பாதையில் கடந்த சில நாட்களாக மீண்டும் சிறுத்தைகள் மற்றும் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது பக்தர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி இரவு அன்று அலிபிரி மலைப்பாதையில் ஆந்திராவை சேர்ந்த குடும்பத்தினர் ஏழுமலையானை தரிசிக்க சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக குடும்பத்தினருடன் வந்த 3 வயது சிறுவன் கௌசிக்கை சிறுத்தை ஒன்று தாக்க தொடங்கியது. தொடர்ந்து, குடும்பத்தினர் அதிகளவில் குரல் எழுப்பி கூச்சலிட்டதால், சிறுவனை சிறுத்தை விட்டுவிட்டு ஓடியது. அதன்பிறகு, பலத்த காயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.
சிறுத்தை, கரடி நடமாட்டம்:
இதேபோல், அடுத்த ஒரு வாரத்தில் நெல்லூர் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியான லக்ஷிதாவை சிறுத்தை தூக்கி சென்று கொன்றது. இதையடுத்து, திருப்பதி மலைப்பாதையில் வரும் பக்தர்கள் பாதுகாப்பாக இருக்க பல்வேறு அறிவுறைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, வனகாவலர்கள் கூண்டுகள் வைத்து சிறுத்தைகளை பிடிக்கும் பணியில் தீவிரமாக களமிறங்கினர். இரவு நேரங்களில் திருப்பதிக்கு மலையில் செல்லும் பக்தர்கள் கைகளில் பிரம்பு உள்ளிட்ட தடிகளுடன் செல்ல தேவஸ்தானம் அறிவுறுத்தியது.
தொடர்ச்சியாக, அலிபிரி மலைப்பாதையில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக சுமார் 320 கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்தநிலையில், திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை, கரடிகளின் நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க திருப்பதி தேவஸ்தானம் அறிவுரை வழங்கியுள்ளது.
அலிபிரி மலைப்பாதையில் 7வது மைல், லட்சுமி நரசிம்மர் கோயில் பகுதியில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் கடந்த 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை பதிவான காட்சிகளில் சிறுத்தை, கரடி நடமாட்டம் உறுதியாகியுள்ளது. இதையடுத்து, திருப்பது தேவஸ்தானம் நிர்வாகம் பக்தர்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், மலைப்பாதையில் நடக்கும் போது தனியாக செல்லாமல் குழுக்களாக செல்லும்படியும் அறிவுறுத்தபட்டுள்ளது.
சிம்மாசலம் கோயிலுக்குள் நுழைந்த நாய்:
விசாகப்பட்டினத்தில் உள்ள சிம்மாசலம் கோயிலுக்குள் நாய் ஒன்று புகுந்தது. கோயிலின் புனிதத்தை சீர்குலைக்கும் வகையில், இரண்டு மணி நேரம் தரிசனத்தை அதிகாரிகள் நிறுத்தினர். கோயில் அர்ச்சகர்கள் சம்ப்ரோக்ஷண நிகழ்ச்சியை நடத்தும் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. அதைத்தொடர்ந்து கோயில் பக்தர்களுக்காக திறக்கப்பட்டது. கோயில் ஊழியர்களின் அலட்சியத்தால் தெருநாய் கோயிலுக்குள் புகுந்ததாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.